×

செங்கல்பட்டு அருகே ரூ.6.5 லட்சம் கடனுக்காக விவசாயி காரில் கடத்தல்: கந்துவட்டி கும்பலை சுற்றி வளைத்து கைது செய்தது போலீஸ்!!

செங்கல்பட்டு:  செங்கல்பட்டு அருகே கடன் கட்ட தவறிய விவசாயியை கடத்தி சென்ற கந்துவட்டி கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். காஞ்சிபுரம் வையாவூர் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவரே கடத்தப்பட்டவர். இவர் ஒரு விவசாயி. இவர் திண்டிவனத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரும், பைனான்சியருமான லட்சுமணன் என்பவரிடம் ரூ.6.5 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இந்நிலையில் ஊரடங்கு காலத்திலும் பணத்தை கேட்டு லட்சுமணன் நச்சரித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செங்கல்பட்டில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்று விட்டு பழைய சீவரம் அருகே காஞ்சிபுரத்திற்கு இருசக்கர வாகனத்தில் பார்த்தசாரதி வந்து கொண்டிருந்தார்.

அப்போது வழிமறித்த சில நபர்கள் காரில் அவரை குண்டுக்கட்டாக கடத்தி சென்றுள்ளனர். இடையே பழவேலியில் உள்ள உணவகத்தில் சாப்பிட காரை நிறுத்தியபோது தனக்கு நேர்ந்ததை நண்பர்களிடம் பார்த்தசாரதி கூறி இருக்கிறார். பின்னர், நண்பர்கள் அளித்த புகாரின்பேரில் துரிதமாக செயல்பட்ட போலீசார் உணவகத்திலேயே கடத்தல் கும்பலை சுற்றிவளைத்து, காரில் அடைத்து வைத்திருந்த பார்த்தசாரதியை மீட்டனர். இதற்கிடையில் லட்சுமணன் மட்டும் தப்பி ஓடிவிட்ட நிலையில், அவரது கூட்டாளிகள் 5 பேர் பிடிபட்டனர். பின்னர் அவர்களை கைது செய்த போலீசார் அனைவரையும் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள லட்சுமணனை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : gang ,Chengalpattu , Farmer kidnapped in car for Rs 6.5 lakh loan near Chengalpattu: Police round up and arrest Kanduvatti gang !!
× RELATED ஒன்றிய மகளிர் நலத்துறை அமைச்சர்...