×

மும்பையில் உள்ள நடிகை கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை மாநகராட்சி இடிக்க ஐகோர்ட் இடைக்கால தடை

மும்பை: மும்பையில் நடிகை கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை மாநகராட்சி இடிக்க ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. பாந்த்ராவில் தனது பங்களாவுடன் உள்ள அலுவலகத்தை இடிக்க தொடங்கியதை எதிர்த்து கங்கனா வழக்கு தொடர்ந்து இருந்தார்.  நடிகை கங்கனா ரனாவத்தின் மனுவுக்கு மும்பை மாநகராட்சி பதிலளிக்கவும் மணிலா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை கங்கனா ரனாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். இதற்கு மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்- கங்கனா ரனாவத் இடையே வார்த்தை போர் நடந்தது.

இதையடுத்து சொந்த ஊரான இமாசல பிரதேசத்தில் தங்கியுள்ள கங்கனா ரனாவத்துக்கு மத்திய அரசு கமாண்டோ பாதுகாப்பு வழங்கியது. மராட்டியத்தில் ஆளும் கட்சியினருடன் மோதல் காரணமாக மும்பை பாந்திராவில் உள்ள தனது அலுவலகத்தை மும்பை மாநகராட்சி இடிக்கலாம் என கங்கனா ரனாவத் நேற்று முன்தினம் அச்சம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பாந்திரா, பாலிஹில்லில் உள்ள நடிகை கங்கனா ரனாவத்தின் பங்களா வீட்டில் பல்வேறு சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி அவருக்கு நேற்று காலை நோட்டீஸ் வழங்கியது. நடிகையின் வீட்டில் யாரும் இல்லாததால் அவரது வீட்டு வாசலில் அதிகாரிகள் நோட்டீசை ஒட்டிச்சென்றனர். கங்கணா ரனாவத்தின் பங்களாவில் உரிய அனுமதி இல்லாமல் கழிவறை பகுதியை அலுவலகமாக மாற்றியதாகவும், படிக்கட்டு பகுதியில் புதிய கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் மாநகராட்சியின் நோட்டீசுக்கு நடிகை கங்கனா ரனாவத் 24 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும் எனவும் கூறினார்.

இதனிடயே கங்கனா ரனாவத்தின் வக்கீல் இது குறித்து அறிக்கை வெளியிட்டார். அதில் கங்கனா ரணாவத் வீட்டில் சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி கங்கனா ரனாவத்தை அச்சுறுத்த முயற்சி செய்வதாகவும் குறிப்பிட்டார். இதனையடுத்து இன்று காலை 11 மணியளவில் மும்பை மாநகராட்சி சார்பில் மீண்டும் கங்கனா வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதனை தொடர்ந்து 12.30 மணிக்கு அதிகாரிகள் முன்னிலையில் கங்கனா ரனாவத் வீட்டின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது.

மும்பை மாநகராட்சியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில், கங்கனாவின் வக்கீல் மனுத்தாக்கல் செய்தார். விசாரணையை மும்பை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதனைதொடர்ந்து உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவில், மும்பையில் நடிகை கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை மாநகராட்சி இடிக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மேலும் கங்கனாவின் மனுவுக்கு மும்பை மாநகராட்சி பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : corporation ,Kangana Ranaut ,Mumbai ,Gangana Ranawaka , Mumbai, Actress Kangana Ranaut, Corporation, Interim Ban
× RELATED நான் மாட்டிறைச்சி சாப்பிடாத பெருமைமிக்க இந்து: கங்கனா ரணாவத்