×

தேசியக் கொடி அவமதிப்பு விவகாரத்தில் எஸ்.வி.சேகரின் வருத்தத்தை ஏற்கிறோம் : காவல்துறை பதில்

சென்னை: தேசியக் கொடி அவமதிப்பு விவகாரத்தில் எஸ்.வி.சேகரின் வருத்தத்தை ஏற்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை பதிலளித்துள்ளது.தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட பாஜ நிர்வாகி எஸ்.வி சேகருக்கு எதிராக, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், எஸ்.வி.சேகர் மீது  மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் எனக் கூறி, எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஏ. நடராஜன், தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் இனி பேசமாட்டேன். இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என எஸ்.வி சேகர் உத்தரவாதம் அளிப்பதோடு, நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்து நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கலாம் எனவும், அதே நேரத்தில் வழக்கை ரத்து செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.

இதற்கு அடுத்த விசாரணையில், எஸ்.வி.சேகர் சார்பில் வருத்தம் தெரிவித்து உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவரது வக்கீல் தெரிவித்தார். அந்த மனுவில், தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கும், தமிழக முதல்வர் குறித்து பேசியதற்கும் வருத்தம் தெரிவித்துள்ள நான் வாழ்நாள் முழுதும் இனி ஒருபோதும் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேசியக் கொடி அவமதிப்பு விவகாரத்தில் எஸ்.வி.சேகரின் வருத்தத்தை ஏற்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை பதிலளித்துள்ளது. மேலும் எஸ்வி சேகரை கைது செய்வதற்கான தடையை செப்டம்பர் 14 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.Tags : SV Sekhar , National Flag, Insult, SV Sehgar, Sad, Police
× RELATED மாற்றுத்திறனாளிகள் தொடர்பான...