தி.மலை செய்யாறில் முதல்வர் வருகைக்கு கடும் எதிர்ப்பு! - 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரி விளைநிலங்களில் இறங்கி மக்கள் போராட்டம்!!!

திருவண்ணாமலை:  திருவண்ணாமலையில் ஆய்வு கூட்டத்திற்கு முதலமைச்சர் சென்றிருந்த நிலையில், செய்யாறு அருகே முதலமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல், அரசு நலதிட்ட உதவிகள் வழங்குதல், திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்புபணிகள் குறித்து ஆய்வு கூட்டம், சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினருடன் கலந்தாய்வுக் கூட்டம் ஆகிய கூட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று நடத்துவதற்காக இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்துள்ளார்.

இந்நிலையில் சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து செய்யாறில் பொதுமக்கள் விளைநிலங்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் கறுப்புக்கொடி ஏந்தி, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும், விவசாய நிலத்தை அழிக்கும் 8 வழிச்சாலை திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இதனை பரிசீலனை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை முன் வைத்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>