108 ஆம்புலன்ஸ் வர தாமதம் குழந்தை பெற்ற பெண் சாவு: மேலூர் அருகே மருத்துவமனை முற்றுகை

மேலூர்: மேலூர் அருகே 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் குழந்தை பெற்ற பெண் உயிரிழந்தார். இதனை கண்டித்து உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே பூதமங்கலத்தை சேர்ந்தவர் கண்ணன் மனைவி ஒய்யம்மாள் (25). இவருக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இரண்டாவது பிரசவத்திற்காக மேலூர் அருகே தும்பைப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை 10 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து மதியம் 2 மணியளவில் அவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் மயங்கினார். எனவே மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு செய்த செவிலியர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் 1 மணி நேரமாக ஆம்புலன்ஸ் வரவில்லை.

இதனால் உறவினர்கள் அவரை தனியார் வாகனத்தில் ஏற்றி மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், ஆம்புலன்ஸ் வராததால்தான் ஒய்யம்மாள் உயிரிழந்ததாக கூறி, டாக்டர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லக்கூடாது என்று தெரிவித்து மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>