×

திருமணிமுத்தாறு மேம்பால பணி மந்தம்: 5 கி.மீ சுற்றிச்செல்லும் 10 கிராம மக்கள்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே திருமணிமுத்தாற்றின் குறுக்ககே ரூ.3.54 கோடியில் கட்டப்படும் மேம்பலாம் பணிகள் மந்தகதியில் நடப்பதால், 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், 5 கி.மீ தூரம் சுற்றிச்செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம், கொன்னையார் பஸ்  நிறுத்தம், அகரம் வழியாக கொத்தம் பாளையத்தில் திருமணி முத்தாறு தரைபாலம் அமைந்தள்ளது. இந்த பாலம் வழியாக 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர். கருமகவுண்டம் பாளையம், கோக்கலை, படுவகாடு, எளையாம்பாளையம், குடித்தெரு, பெரியமணலி, புள்ளாச்சிபட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையாக, கொத்தம்பாளையத்தில் திருமணிமுத்தாறு பாலம் உள்ளது. தவிர கொத்தம்பாளையம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மாணவர்கள், மழைக் காலங்களில் எலச்சிபாளையம் அரசு பள்ளிக்கு வந்து செல்லவும், பொதுமக்கள் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்ல இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.

ஆண்டுதோறும் கனமழை பெய்யும் காலங்களில், ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் பாலம் தண்ணீரில் மூழ்கி விடுகிறது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்லும் போது விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மின்துறை அமைச்சர் தங்கமணி தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்றிட அடிக்கல் நாட்டினார்.  ரூ.3.54  கோடிநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் துவங்கியது. ஓராண்டாகியும் இதுவரை தரைபாலத்தின் அடியில் பில்லர்  குழிகள் மட்டுமே தோண்டப்பட்டு உள்ளன. மற்ற பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக சேலம், நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் திருமணிமுத்தாற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த பாலத்தை பயன்படுத்தி வந்த 10 கிராம மக்கள், சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, மேம்பாலம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Thirumanimuttaru ,Tiruchengode , Tiruchengode, villagers, Thirumanimuttaru
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு