×

மேலப்பாளையம் சந்தை பகுதியில் சாலையில் களைகட்டிய கோழி விற்பனை

நெல்லை: ஊரடங்கு தளர்வு காரணமாக பஸ், ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், மேலப்பாளையம் சந்தை பகுதியில் சாலையில் கோழி விற்பனை களை கட்டியது. சிலர் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர். தென் மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டு சந்தை, நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஆட்டு சந்தை ஆகியவற்றில் ஆடுகள் விற்பனை எப்போதுமே அதிகமாக நடக்கும். இச்சந்தைகளுக்கு விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்களில் இருந்து கூட வியாபாரிகள் வருவர். இவ்வாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ஆட்டு சந்தைகள் அனைத்தும் மாதக்கணக்கில் மூடி கிடக்கின்றன.

நெல்லை, தூத்துக்குடியின் ஆடு, மாடு விற்பனையை நிர்ணயிக்கும் முக்கிய சந்தையான மேலப்பாளையம் சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் தற்போது கோழி விற்பனை மட்டுமே பெயரளவுக்கு நடந்து வந்தது. இந்நிலையில் பஸ், ரயில் போக்குவரத்து தொடங்கிவிட்ட சூழலில், நேற்று மேலப்பாளையம் சந்தை சாலையில் நடந்த கோழி சந்தையில் கூட்டம் அதிகரித்தது. வெளியூர் வியாபாரிகளும் வந்து தங்கள் தேவைக்கேற்றபடி கிரி ராஜா மற்றும் நாட்டு கோழிகளை விலை பேசி வாங்கி சென்றனர்.

வழக்கத்திற்கு மாறாக சந்தை சாலையில் ஆடுகளும் விற்பனைக்கு வந்திருந்தன. வெள்ளாடுகளை விட செம்மாறியாடுகளே அதிகம் விற்பனை செய்யப்பட்டன. ஆட்டு வியாபாரிகள் தரமான ஆடுகளை விலைபேசி வாங்கி சென்றனர். மேலப்பாளையம் கால்நடை சந்தை சாலை மீண்டும் களைக்கட்டும் சூழலில், மாநகராட்சி சந்தையை திறந்து விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

Tags : road ,market area ,Melappalayam , Poultry sales, lockdown relaxation
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...