×

அருப்புக்கோட்டை அருகே 17ம் நூற்றாண்டு சதிக்கல் கண்டுபிடிப்பு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே 17ம் நூற்றாண்டு சதிக்கல் கண்டறியப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரத்தில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியர் விஜயராகவன் கூறியதாவது: இந்த சதிக்கல் 66 செ.மீ உயரம், 50 செ.மீ அகலம் கொண்டது. இதில் உள்ள சிற்பம் ஏறு தழுவும்போது இறந்த வீரனின் சிற்பம். வீரனின் தலை முடி பின்புறம் கொண்டை முடியப்பட்டுள்ளது. காது, கழுத்தில் அணிகலன்கள் உள்ளன. இரு புஜங்களில் தோள்வளையம் உள்ளது. இடதுபுறம் உள்ள வாள் மேல் நோக்கி உள்ளது. ஏறுதழுவுதலின் அடையாளமாக இரண்டு மாடுகள் சிற்பத்தின் கீழ் உள்ளன. வீரனின் அருகில் பெண் சிற்பம் உள்ளது. சதி மேற்கொண்டாள் என்பதன் அடையாளமாக வலது கை தோளில் ‘எல்’ வடிவம் போல் உள்ளது.

அப்பெண் அணிகலன், கழுத்தாணி, தோள் வளையம், கையில் வளையல் அணிந்துள்ளார். பெண்ணின் அருகில் ஒரு சிறிய பெண் சிற்பம் உள்ளது. அவரது கையில் மங்களப் பொருட்கள் உள்ளன. இறந்த வீரரை வானுலக மங்கையர் வானுலகிற்கு அழைத்துச் செல்வர் என்ற நம்பிக்கையில் இச்சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சதிக்கோயில் தற்போது கல்வீரம்மன் என்ற பெயரில் வழிபாடு செய்யப்படுகிறது. மாசி மாதம் சிவராத்திரி, சித்திரை மாதம் பவுர்ணமியிலும் ஊர் கூடி திருவிழா கொண்டாடுகின்றனர். சிலர் குல தெய்வமாக வழிபடுகின்றனர். இத்தகைய வரலாற்றுச் சுவடுகளை தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கிராமங்களில் சதிக்கல்

அருப்புக்கோட்டையைச் சுற்றியுள்ள கிராமங்களில் 16, 17ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சதிக்கற்கள் அதிகம் உள்ளன. நாடு மற்றும் இனத்தை காக்க போரிட்டு வீரமரணம் அடைந்த வீரனின் உடலோடு, அவனது மனைவி தீ மூட்டி உயிரை மாய்த்து உடன்கட்டை ஏறும் நிகழ்வை குறிக்க சதிக்கல் வைப்பர். இவற்றை மகா சதிக்கல் எனவும் அழைப்பர். கல்லில் வீரனின் உருவத்தைச் செதுக்கி, அவன் எதனால் மரணமடைந்தான் என்பதையும் செதுக்கியிருப்பர் என கூறப்படுகிறது.

Tags : Aruppukkottai , Aruppukottai, sathikkal, invention
× RELATED அருப்புக்கோட்டை காந்திநகர் பஸ்...