×

திருவண்ணாமலையில் 18 ஆண்டுகளாக செயலிழந்துள்ள ‘டான்காப்’ மணிலா எண்ணெய் ஆலை மீண்டும் உயிர்பெறுமா?

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கடந்த 18 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள டான்காப் எண்ணெய்வித்து தொழிற்சாலையை மீண்டும் திறக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தின் வட மாவட்டங்கள், உணவு தானிய உற்பத்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சன்னரக நெல், மணிலா, கரும்பு சிறு தானியங்கள், மலர்கள் போன்ற சாகுபடியில் முன்னணியில் இருக்கின்றன. டெல்டா மாவட்டங்கள் நெல் உற்பத்திக்கு அடையாளமாக இருப்பதைப்போல, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர், சேலம், தர்மபுரி உள்ளிட்ட வட மாவட்டங்கள் மணிலா, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயறு வகை பயிர் சாகுபடியின் அடையாளமாக திகழ்கிறது.

மழைக்காலங்களிலும், மழை குறையும் காலங்களிலும் தங்கள் வியர்வையை மூலதனமாக்கி இவற்றை சாகுபடி செய்கின்றனர். நேரடி பயிராகவும், ஊடு பயிராகவும், மானாவாரியாகவும் இவற்றை சாகுபடி செய்யலாம். தண்ணீர் தேவை குறைவு. எனவே, குறைந்த நீராதாரம் மிக்க வட மாவட்டங்களில், விவசாயிகளின் பொருளாதாரத்தை தாங்கி பிடிப்பதில் மணிலாவுக்கு முக்கிய இடமுண்டு. எனவே, மணிலா விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்த, தமிழகத்தில் சமையல் எண்ணெய் தேவையை தன்னிறைவு செய்ய, இறக்குமதி பாமாயிலுக்கு கையேந்தும் நிலையை தவிர்க்க, தமிழ்நாடு கூட்டுறவு எண்ணெய்வித்து உற்பத்தியாளர் சங்கத்தின் (டான்காப்) மூலம், திருவண்ணாமலையில் கடந்த 1985ம் ஆண்டு சுமார் ₹100 கோடி செலவில் மணிலா எண்ணெய் உற்பத்தி நிறுவனம் தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் மிகப்பெரிய முதலீட்டில் தொடங்கப்பட்ட விவசாயம் சார்ந்த முக்கியமான தொழிற்சாலையாக இது திகழந்தது. மணிலா உடைப்பு, அரவை, எண்ணெய் பிழிவு, சுத்திரகரிப்பு, பேக்கிங் என ஒட்டுமொத்த யூனிட்களும் உள்ளடக்கிய டான்காப் நிறுவனத்தில், நாளொன்றுக்கு சராசரியாக 50 டன் மணிலா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது. முதல் தரமான, ரசாயன கலப்பு இல்லாத, உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய மணிலா எண்ணெய்க்கு மிகப்பெரிய விற்பனை வாய்ப்பு கிடைத்தது. தமிழகம் மட்டமின்றி, வெளி மாநிலங்களுக்கு இங்கிருந்து மணிலா எண்ணெய் சப்ளை செய்யப்பட்டன. தேவைக்கு தகுந்தபடி உற்பத்தி செய்ய முடியாத அளவில், ஆலை முழு நேரமும் இயங்கியது. அதனால், மணிலாவுக்கு கூடுதல் விலை கிடைத்து, விவசாயிகள் நேரடியாக பயன் பெற்றனர். இடைத்தரகர்கள் இல்லாமல், நேரடி கொள்முதல் செய்யப்பட்டன. டான்காப் ஆலையை நம்பி, மணிலா சாகுபடி பரப்பு வெகுவாக உயர்ந்தது.

திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், சேலம், தர்மபுரி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள மார்க்கெட் கமிட்டிகளில் இருந்து, டான்காப் நிறுவனம் நேரடியாக மணிலா கொள்முதல் செய்தது. எனவே, தண்ணீர் தேவை அதிகமுள்ள பயிர்களை தவிர்த்து, மானாவாரி பயிராகவும் சாகுபடி செய்யும் வாய்ப்புள்ள மணிலா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் செலுத்தினர். டான்காப் மணிலா எண்ணெய் ஆலையும் மிக லாபகரமாக இயங்கின. வெளி மாநிலங்களுக்கு, இங்கிருந்து எண்ணெய் ஏற்றுமதியானது. சூரியகாந்தி எண்ணெய், பாமாயில், தவிட்டு ஆயில் போன்றவை தலைதூக்க முடியாமல் தள்ளாடியது. எனவே, கொழுப்பு சத்து அதிகம், ஹார்ட் அட்டாக் வரும் என தவறான பிரசாரங்களால் மணிலா எண்ணெய் பயன்பாட்டை வீழ்த்தும் தந்திரங்கள் நடந்தன. தொடர்ந்து, விரிக்கப்பட்ட சூழ்ச்சி வலையில், திருவண்ணாமலை டான்காப் மணிலா எண்ணெய் உற்பத்தி நிறுவனம் சிக்கியது. மேலும், நிர்வாக குளறுபடி, லாபமின்மை என படிப்படியாக காரணங்கள் அடுக்கப்பட்டன.

டான்காப் ஆலை நலிவடையத் தொடங்கியது. அதற்கு, அரசு நிர்வாகமும் உடந்தையாக இருந்தது. தொடர்ந்து நடந்த சூழ்ச்சியின் விளைவாக, மாநிலத்தின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் உற்பத்தி மையமாக திகழ்ந்த திருவண்ணாமலை டான்காப் எண்ணெய் வித்து ஆலை கடந்த 27.2.2002ல் இழுத்து மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிறுவனத்தில் பணிபரிந்த 450 தொழிலாளர்கள் வேலையிழந்து, வீதிக்கு வந்தனர். டான்காப் எண்ணெய் ஆலையை நம்பியிருந்த, 6 மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மணிலா விவசாயிகளின் வாழ்வு கேள்விக்குறியானது. அதைத்தொடர்ந்து, பல்வேறு போராட்டங்கள், தேர்தல் கால வாக்குறுதிகள் என காலம்தான் கடந்ததே தவிர, இதுவரை திருவண்ணாமலை டான்காப் எண்ணெய் ஆலை திறக்க வாய்ப்பில்லாமல் முடங்கியிருக்கிறது. கடந்த 18 ஆண்டுகளாக பயனற்று மூடப்பட்டுள்ள டான்காப் கட்டிடம், சில ஆண்டுகள் டாஸ்மாக் மதுபான கிடங்காக மாறியது அவலத்தின் உச்சம். மணிலா எண்ணெய் உற்பத்தி செய்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள், ஆண்டுக்கணக்கில் பயன்படுத்தாததால் உருக்குலைந்துவிட்டன. கட்டிடங்கள் பாழாகிவிட்டன.

இந்நிலையில், பாரம்பரியமான மணிலா எண்ணெய் மீதான மக்களின் கவனம் தற்போது மீண்டும் திரும்பத் தொடங்கியிருக்கிறது. சூரிய காந்தி எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்த்து, மணிலா எண்ணெய், நல்லெண்ணைய் பயன்பாடு அதிகரித்துவிட்டது. குறிப்பாக, மர செக்கு மணிலா எண்ணெய் எங்கே என தேடி வாங்கும் எண்ணம் மக்களிடம் வந்துவிட்டது. அதனால், தரமற்ற மணிலா எண்ணெய்கள் தற்போது மார்க்கெட்களுக்கு வந்துவிட்டன. அதோடு, சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தி செய்த பல பன்னாட்டு நிறுவனங்கள், தற்போது ரசாயன கலப்புள்ள மணிலா எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட தொடங்கிவிட்டனர். எனவே, மணிலா விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க, தரமான மணிலா எண்ணெய் மக்களுக்கு கிடைத்திட செய்வது அரசின் கடமையாகும்.

கடந்த 18 ஆண்டுகளாக செயலிழந்திருக்கிற, திருவண்ணாமலை டான்காப் மணிலா எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலைக்கு புத்துயிர் அளிக்கும் தேவையும், அவசியமும், மிகச் சரியான சூழலும் தற்போது கனிந்திருக்கிறது. எனவே தற்போது திருவண்ணாமலைக்கு வந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதில் கவனம் செலுத்தி 6 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு வழிவகுக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விற்பனை வீழ்ச்சி

வெண்மை புரட்சியில் கவனம் செலுத்திய குஜராத் மாநிலம், இங்கிருந்து புண்ணாக்கு கொள்முதல் செய்தது. டான்காப் மணிலா எண்ணெய்க்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனால், பன்னாட்டு இறக்குமதி சமையல் எண்ணெய் விற்பனை வீழ்ச்சியை சந்தித்தன.

Tags : oil plant ,Dancop ,Thiruvannamalai ,Manila ,Doncop , Thiruvannamalai, Doncop
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...