×

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய மோசடி: புகார்தாரர்களுக்கு தெரியாமல் வழக்குகள் முடித்து வைப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் புகார்தாரர்களுக்கு தெரியாமலேயே வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக சில இன்ஸ்பெக்டர்கள் மீது எஸ்பியிடம் புகார்கள் குவிந்துள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பல புகார்களின் மீது காவல் நிலையங்களில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவற்றின் மீது தொடர்ந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன.

மேலும் இந்த வழக்குகளில் புகார்தார்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அழைத்து சில ஆவணங்களில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. அவர்களும் மேல் நடவடிக்கைக்காகவே தங்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது என்று நினைத்து கையெழுத்து போட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு தெரியாமலயே அந்த கையெழுத்துக்களை வைத்து அவர்கள் அளித்த புகார்களை வாபஸ் பெறுவதாக ‘எம்எப்’ எனப்படும் ‘மிஸ்டேக் ஆப் பேக்ட்’ சான்றிதழ் வழங்கப்பட்டு வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி அணைக்கட்டு அமைந்துள்ள பகுதியில் இருந்து மணியான சரகத்திற்கு ஒரு இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இன்ஸ்பெக்டர் தனது கட்டுப்பாட்டில் இருந்த காவல் நிலையங்களில் இதுபோன்று புகார்தார்களிடம் மோசடியாக கையெழுத்து பெற்றுள்ளார். தொடர்ந்து புகார்தாரர்களுக்கே தெரியாமல் அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர்களை ‘எம்எப்’ என்று மேல்நடவடிக்கை தேவையில்லை என்று முடித்து வைத்துள்ளார்.

மேலும் இதில் மேல்முறையீட்டிற்கு கால அவகாசம் அளிக்க இயலாத வகையில் புகார்தாரர்களுக்கு தெரியாமல் கடந்த மாதத்தின் தேதிகளிட்டும் இதுபோன்று மேலும் 5 எப்ஐஆர்களை முடித்து வைத்துள்ளார். சம்பந்தப்பட்ட புகார்தாரர்கள் தங்கள் வழக்குகளில் மேல் நடவடிக்கை குறித்து விசாரித்தபோதே தங்களுக்கே தெரியாமல் புகார்கள் குறித்த எப்ஐஆர்கள் முடிக்கப்பட்டுள்ளது தெரிய வந்ததுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அடுத்தடுத்து அந்த இன்ஸ்பெக்டர் மீது மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் அவர் பணியாற்றிய காவல் நிலையத்தில் இருந்து பணியிடம் மாறிச் செல்லும் சில நிமிடங்களுக்கு முன்பு வரையில் அந்த இன்ஸ்பெக்டர் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக புகார் அளித்தவர்களின் எதிர்தரப்பை சேர்ந்தவர்களிடம் இருந்து கணிசமான தொகைகளையும் பெற்றுக் கொண்டுள்ளதாக புகார்தாரர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் எஸ்பி உத்தரவின் பேரில் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி ஒருவர் நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகிறார். அதிகாரிகள் மேலும் ஆய்வு செய்தால் இதுபோன்று சட்டவிரோதமாக, மோசடியாக முடித்துவைக்கப்பட்ட பல எப்ஐஆர்கள் குறித்த விபரங்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுளுக்கு முன் புகார் கொடுத்து எப்ஐஆர் நிலையில் நின்று போன பல வழக்குகளின் நிலை குறித்து புகார்தாரர்கள் தகவலறியும் உரிமை சட்டம் மூலம் அறிய முயன்று வருகின்றனர். இதுபோன்ற மோசடி குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் புலம்பி வருகின்றனர்.

டிஜிபியிடம் புகார்

இதேபோன்று தூத்துக்குடி நகர காவல் நிலையங்கள் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் புகார்தாரர்களுக்கே தெரியாமல் இந்த ‘எம்எப்’ மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிலர் சட்டம் ஒழுங்கு டிஜிபி, தென்மண்டல ஐஜி, நெல்லை டிஐஜி ஆகியோரிடம் புகார் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிலர் இந்த மோசடி இன்ஸ்பெக்டர்கள் மீது கோர்ட்டில் மோசடி வழக்குகள் தொடரவும் முடிவு செய்துள்ளனர். தூத்துக்குடி நகர காவல் நிலையம் ஒன்றில் இதேபோன்று நடந்த புகார்தாரருக்கு தெரியாமல் நடந்த மோசடியால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி தொழிலதிபர் ஒருவர், டிஜிபியிடம் புகார் தெரிவித்துள்ளார்.

Tags : district ,Thoothukudi ,Tuticorin , Tuticorin, police
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...