×

கேரள தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக கோவையில் நகைக்கடை பட்டறை உரிமையாளர் வீட்டில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை!!!

கோவை:  கேரள தங்கக்கடத்தல் வழக்கு தொடர்ச்சியாக தற்போது கோவையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தங்க நகை பட்டறை உரிமையாளரின் வீட்டில் திடீரென அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை 6 மணி முதல் தொடங்கிய இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. என்.ஐ.ஏ., அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது. கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா சுரேஷ் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடத்தல் சம்பவத்தின் தொடர்ச்சியாக விசாரணையானது நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் தமிழகத்தில் முகாமிட்டு, சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தங்கக்கடத்தல் விவகாரத்தில் விசாரணை நடத்தி, ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது 4 பேர் கொண்ட என்.ஐ.ஏ., குழு கோவையில் உள்ள பட்டறை உரிமையாளர் நந்தகுமார் என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை தொடங்கிய இந்த சோதனையானது தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இதனைத்தொடர்ந்து பட்டறையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களிடமும் விசாரணையானது நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில், தங்க நகை வர்த்தகத்தில் மிக முக்கியமான நகரமாக கருதப்படுகிறது. மேலும் இங்கு தயாரிக்கக்கூடிய நகைகள் வெளிநாடுகளுக்கும் எடுத்துச்செல்லக்கூடிய சூழல் இருந்து வருகிறது. இதற்கிடையில் கேரள தங்கக்கடத்தல் பூதாகரமாக வெடித்திருக்கக்கூடிய நிலையில், ஆரம்ப கட்டத்திலேயே கோவையில் இந்த தங்கக்கடத்தல் பரிமாற்றம் நடந்திருக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது.

அதன் அடிப்படையிலேயே என்.ஐ.ஏ., அதிகாரிகள் தற்போது நகைக்கடை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் முடிவிலேய நந்தகுமாருக்கும் தங்கக்கடத்தல் விவகாரத்திற்கு தொடர்புள்ளதா? என்பது தெரியவரும். ஆனால் இதுவரை எந்த வித ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து சோதனையானது நடைபெற்று வருகிறது.

Tags : raids ,home ,NIA ,jewelery shop owner ,Coimbatore ,Kerala ,shop owner ,house , Kerala, Gold Smuggling, Coimbatore, Jewelery, Workshop, Owner, NIA,, Officers
× RELATED அரசு அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச...