×

சுங்க கட்டணம் செலுத்தாததால் டோல்கேட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள்: பயணிகளே சுங்கம் கட்டிய அவலம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டோல்கேட்டில் கட்டணம் செலுத்தாததால், தடுத்து நிறுத்தப்பட்ட அரசு பஸ்களால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து, பயணிகள் தங்கள் சொந்த பணத்தில் சுங்க கட்டணத்தை செலுத்திய பின்னர், பஸ்கள் புறப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் கோட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூர், பெங்களூருவுக்கு 30 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 7ம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதையடுத்து, நேற்று விழுப்புரம் கோட்டத்தில் இருந்து ஓசூருக்கு புறப்பட்ட அரசு பஸ்கள் கிருஷ்ணகிரியை கடந்து சென்றன. அப்போது, பஸ்களுக்கு சுங்க கட்டணம் செலுத்தாததால், பஸ்கள் கடந்து செல்ல டோல்கேட் ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இதனால், பயணிகள் கீழே இறங்கி, மாற்று பஸ்களில் ஓசூர் அனுப்பப்பட்டனர்.

அவ்வாறு நிறுத்தப்பட்ட 5 பஸ்களில், 3 பஸ்களில் பயணம் செய்த பயணிகள் தங்களின் சொந்த பணத்தை சுங்க கட்டணமாக செலுத்தினார்கள். அதன் பிறகு பஸ்கள் புறப்பட்டுச் சென்றன. 2 பஸ்கள் சுங்க கட்டணம் செலுத்தாததால் மேற்கொண்டு செல்ல அனுமதிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த பிரச்னையால் பயணிகள் மிகவும் சிரமத்திற்குள்ளானார்கள். இதுகுறித்து டிரைவர்கள் கூறுகையில், “சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் பேசி விட்டோம். நீங்கள் பணத்தை கட்ட வேண்டாம் என கூறி, எங்களது அலுவலர்கள் அனுப்பி வைத்தனர். இதற்கான மின்னஞ்சல் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தனர். ஆனால், சுங்கச்சாவடியில் பணம் கட்டினால் மட்டுமே செல்ல அனுமதிக்க முடியும் என கூறுகின்றனர். இதனால், வேறு வழியின்றி பயணிகளை மாற்று பஸ்களில் அனுப்பி வைத்தோம்,’ என்றனர். இதுதொடர்பாக சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் கேட்டபோது, “சுங்க கட்டணம் செலுத்தும்படி கூறி நாங்கள் பல முறை அறிவுறுத்தியும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை,’ என்றனர்.

Tags : Tolkien , Customs, Government Bus
× RELATED சர்ச்சைக்குரிய டூல்கிட் விவகாரத்தில்...