×

இந்திய வீரர்கள் கோபத்தை தூண்ட, லடாக்கில் துப்பாக்கிச்சூடு வம்பு சண்டைக்கு இழுக்கிறது சீனா: நேருக்கு நேர் சந்தித்த படைகளால் பதற்றம்

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் எல்லை பாதுகாப்பு பணியில் கட்டுப்பாட்டுடன் ஈடுபட்டுள்ள இந்திய வீரர்களின் கோபத்தை தூண்டி வம்பு சண்டைக்கு இழுப்பதற்காக, சீன வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால், ஏற்கனவே அமைதியின்றி காணப்படும் லடாக் எல்லையில் போர் பதற்றம் அதிகமாகி இருக்கிறது. கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 5 மாதங்களாக இந்தியா - சீனா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த ஜூன் 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த கைகலப்பில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் பலியாயினர். 45 ஆண்டுக்குப் பின் இதுபோன்ற பயங்கர மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து எல்லையில் இரு படைகளும் குவிக்கப்பட்டன. இதனால், போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.

இதையடுத்து நடந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையில் படைகள் வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டன. ஆனால், சீனா பல இடங்களில் தனது படையை வாபஸ் பெறாமல் தற்போது மீண்டும் எல்லையில் அத்துமீறத் தொடங்கி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் பாங்காங் திசோ ஏரிப் பகுதியில் எல்லை நிலைகளை மாற்ற முயன்ற சீனாவின் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் இரு தரப்பிலும் மோதல் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், 4 நாட்களுக்கு முன், மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையால் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு கிழக்கு லடாக்கில் இந்திய சீன ராணுவம் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விவகாரத்தில் இரு ராணுவம் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு சீன ராணுவத்தின் மேற்கு பிராந்திய தளபதியும், செய்தி தொடர்பாளருமான மூத்த கர்னல் சாங் ஷூலித விடுத்த அறிக்கையில், ‘இந்திய ராணுவத்தினர் மீண்டும் ஒருமுறை சட்டவிரோதமாக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சீன எல்லை ரோந்து வீரர்களை எச்சரிக்கை செய்யும் வகையில் வானில் துப்பாக்கியால் சிலமுறை சுட்டனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர சீன படையினர் எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகினர்,’’ என்றார். பாங்காங் திசோ ஏரியின் தென் கரையை ஒட்டி ஷென்பாவோ மலைப் பகுதி அருகே இந்திய ராணுவம் அத்துமீறியதாக அவர் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து இந்திய ராணுவம் நேற்று விளக்க அறிக்கை வெளியிட்டது. அதில், சீனா கூறிய அத்தனைக்கும் மறுப்பு தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், ‘எல்லை கட்டுப்பாடு கோட்டை (எல்ஏசி) இந்திய ராணுவம் தாண்டிச் செல்லவில்லை. அதே போல், துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட எந்த உக்கிரமான முறைகளையும் ராணுவம் கையாளவில்லை. எல்ஏசி அருகே சீன ராணுவத்தினர் இந்திய நிலையை நெருங்க முயற்சித்தனர். அதை இந்திய வீரர்கள் தடுத்ததால் அவர்களை தூண்டும் விதமாக சீன படையினர் வானை நோக்கி துப்பாக்கியால் சிலமுறை சுட்டனர்.

மிக மோசமாக தூண்டிவிடப்பட்டாலும், இந்திய ராணுவம் அமைதி காத்து மிகுந்த பொறுப்புடன் நடந்து கொண்டது. இந்திய ராணுவம்  அமைதியை நிலைநாட்ட உறுதி கொண்டுள்ளது. அதே சமயம் எந்த விலை கொடுத்தாவது தேசத்தின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்கும்,’ என கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து லடாக் எல்லையில் மீண்டும் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டு வருகின்றன. சீனா ஏரியை ஒட்டிய தரைப்பகுதியில் தனது படைகளுடன் ஆயுதங்களை குவித்து வருவதாக கூறப்படுகிறது. இதே போல், இந்தியாவும் சீனாவின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. பாங்காங் திசோ ஏரிப்பகுதியில் இரு நாட்டு ராணுவமும் நேருக்கு நேர் சந்தித்தபடி இருக்கும் நிலையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதனால், லடாக் எல்லை நிலவரம் தற்போது இன்னும் மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது.

* கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் திட்டமிட்டு தாக்க வந்த சீன வீரர்கள்
கடந்த திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு கிழக்கு லடாக்கின் பாங்காங் திசோ தென்பகுதியில் சுமார் 50-60 சீன வீரர்கள் இந்திய நிலையை நெருங்கி வந்துள்ளனர். அவர்கள் கைகளில் இரும்பு ராடு, கத்தியுடன் கூடி நீளமான கம்புகள் (சீன தற்காப்பு கலையில் பயன்படுத்துபவை) போன்ற ஆயுதங்களையும் எடுத்து வந்துள்ளனர். கடந்த ஜூன் 15ம் தேதி மோதல் நடந்த போது கூட இதே போல ஆயுதங்களை சீன வீரர்களை கொண்டு வந்து தாக்கினர். எனவே அதே போன்ற கொடூர தாக்குதல் நடத்த திட்டமிட்டே அவர்கள் வந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்திய நிலையை நெருங்கிய அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் திருப்பி அனுப்ப முயன்றனர். அப்போதுதான் கோபத்தை தூண்ட சீன வீரர்கள் 10-15 முறை வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக சீன வீரர்கள் கம்பு, கத்தியுடன் உள்ள புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

* மாயமான 5 பேர் கிடைத்து விட்டனர்
அருணாச்சல் மாநிலத்தை சேர்ந்த 5 இளைஞர்களை எல்லையோர வனப்பகுதியில் இருந்து சீன ராணுவம் கடத்திச் சென்றதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் பரவியது. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றி எந்த தகவலும் தெரியாமல் இருந்ததால் பதற்றம் நிலவியது. இந்நிலையில், 5 பேரும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று தெரிவித்தார். அவர் அளித்த பேட்டியில், ‘‘சீனா ஹாட்லைன் மூலம் இந்தியாவுக்கு பதில் அளித்துள்ளது. அருணாச்சல் இளைஞர்கள் சீனா பிடியில் இருப்பதாக அவர்கள் உறுதிபடுத்தி உள்ளனர். இளைஞர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’’ என்றார்.

* குளிர்காலம் நெருங்குது நிலைமை சரியாயிடும்
எல்லை பதற்றம் குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லிஜியன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘எங்கள் துருப்புகள் அவர்களின் முகாமுக்கு விரைவில் திரும்புவார்கள் என நம்புகிறோம். எல்லையில் இனி மோதல்கள் இருக்காது. ஏனெனில், அந்த இடம் மிக மோசமான இயற்கை சூழலை கொண்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். 4,000 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள அப்பகுதியில் விரைவில் குளிர்காலம் வர உள்ளது. அதில், மனிதர்கள் வாழவே முடியாத சூழல் இருக்கும். எனவே, பாதுகாப்பு மற்றும் தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகள் மூலமாக விரைவில் அமைதி திரும்ப ஒருமித்த கருத்தை எட்ட முடியும் என நம்புகிறோம்,’’ என்றார்.

* 45 ஆண்டுக்கு பின் முதல் துப்பாக்கிசூடு
இந்தியா-சீனா எல்லையில் கடந்த 1975ம் ஆண்டு ஏற்பட்ட மோதலின் போது கடைசியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதன்பின் 45 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் எல்லையில் துப்பாக்கி சத்தங்கள் கேட்டுள்ளன.

Tags : Indian ,China ,soldiers ,Ladakh , Indian soldiers, provocation, Ladakh, gunfire, brawl, China, confrontation, tension
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...