சென்னை: சென்னை, மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை முன்பாக காவல்ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். சாலையில் சென்ற பயணிகளிடம் முக கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல் போன்ற வற்றின் அவசியத்தை எடுத்துரைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,‘கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மக்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும். கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். தொடர்ந்து காவல் துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மெரினா கடற்கரை திறப்பது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும். மேலும் கலைவாணர் அரங்கில் சட்டபேரவை நடைபெற உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. போக்குவரத்து மாற்றம் குறித்து இரண்டு நாட்களில் திட்டமிட்டு அறிவிக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.