×

‘நான் உன்னைதான் காதலிக்கிறேன்... நீ இல்லாமல் நானில்லை’... பேஸ்புக்கில் காதல் வலை விரித்து வாலிபரிடம் நவீன பைக் பறிப்பு: கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது; காதலன் உள்பட 5 பேருக்கு வலை

திருச்சி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அங்கு செட்டிபாளையத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (30). பிரிண்டிங் பிரஸ் வைத்துள்ளார். இவருக்கு ஒரு வருடத்துக்கு முன் பேஸ்புக் மூலம் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி  தோழியானார். பிறகு  வாட்ஸ் அப் மூலம் பேசி காதலித்து வந்தனர். திடீரென 3 மாதமாக மாணவி பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் வினோத்குமார் தவித்து வந்தார். இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் மாணவியிடமிருந்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்தது. அதில், ‘‘நான் உன்னைதான் காதலிக்கிறேன்... நீ இல்லாமல் நானில்லை... கவர்ச்சியான போட்டோக்களை அனுப்பியது நான் தான். உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை’’ என உருகியுள்ளார். கடந்த 5ம் தேதி போன் செய்த மாணவி, உன்னை நேரில் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் காதலியை பார்க்க அன்றே ஆவலுடன் வினோத்குமார் ரூ.2.30 லட்சம் மதிப்புள்ள பைக்கில் திருச்சி வந்தார்.

திருச்சி ஜங்ஷன் வந்ததும் அவர், காதலிக்கு போன் செய்துள்ளார். மாணவி, எதில் வந்தாய் என கேட்டதற்கு பைக்கில் வந்ததாக கூறி பைக்குடன் செல்பி எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார். அதன்பின் மீண்டும் போன் செய்து மதுரை ரோட்டில் உள்ள ராணுவ மைதானத்துக்கு வரும்படி மாணவி கூறினார். இதனால் வினோத்குமார் அங்கு சென்று காத்திருந்தார். அப்போது, அங்கு ஒரு ஆட்டோவில் வந்த 4 பேர், மாணவி அழைத்து வர சொன்னதாக கூறி ஆட்டோவில் ஏற்றி சென்றனர். பைக்கை 2 பேர் பின்னால் ஓட்டி வந்தனர். கன்டோன்மென்ட் வஉசி சாலையில் உள்ள ஒரு வீட்டுக்கு அவரை அழைத்து சென்று பைக்கை பறித்துக்கொண்டு சரமாரி தாக்கியுள்ளனர். பின்னர் ரூ.1லட்சம் தந்தால் பைக்கை தருவதாக கூறி விரட்டி விட்டனர்.

இதுபற்றி வினோத்குமார் கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். தனிப்படை போலீசார் வினோத்குமாரை வைத்து பணம் ரெடியாக இருப்பதாக அந்த கும்பலுக்கு போன் செய்ய வைத்து கே.கே.நகர் பகுதிக்கு அழைத்தனர். மாணவி உட்பட 3 பேர் அங்கு வந்தபோது போலீசார் சுற்றிவளைத்தனர். விசாரணையில், திருச்சி காஜாமலையை சேர்ந்த ரகமத்நிஷா (20), மதுரைரோடு வள்ளுவர் நகரை சேரந்த ஆசிக் என்ற நிவாஷ் (26), பாலக்கரையை சேர்ந்த முகமதுயாசர் (22) என்பதும், ஆசிக் என்ற நிவாஷ் ஐஎன்எல் கட்சி திருச்சி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் என்றும் தெரிய வந்தது. ரகமத்நிஷா கல்லூரி மாணவி. இவர் அன்சாரி என்பவரை காதலித்து கடந்த 3ம் தேதி நிச்சயம் முடிந்துள்ளது. காதலனுடன் சேர்ந்து வாலிபர்களிடம் பேஸ்புக் மூலம் பழகி பணம், பொருட்களை பறித்து வந்துள்ளார். இதற்கு அஜிஸ், சித்திக், அன்சாரிலால், உசேன் ஆகிய 4 பேரும் உடந்தையாக இருந்துள்ளனர் என தெரிவித்தனர். மாணவி உட்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். காதலன் உள்பட 5 பேரை தேடுகின்றனர்.


Tags : teenager ,college student , ‘I love you, I am not without you’, Facebook, love web, teenager, modern bike flush, college student, 3 arrested, boyfriend, 5 for web
× RELATED வாலிபர் இறப்பில் சந்தேகம் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்