×

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க 2,800 எம்டிசி பஸ்களில் கண்காணிப்பு கேமரா: போக்குவரத்துத்துறை தீவிரம்

சென்னை: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் முதற்கட்டமாக 2,800 எம்டிசி பஸ்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்கான பணியில் போக்குவரத்துத்துறை தீவிரம் காட்டி வருகிறது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமாக 33 டெப்போக்கள் உள்ளன. இங்கிருந்து நாள்தோறும் 673 வழித்தடங்களில் 3,600க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினந்ேதாறும் சுமார் 36 லட்சம் பேர் இவற்றில் பயணிக்கின்றனர்.
இதில் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் அடங்குவர். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் போக்குவரத்துத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக 2,800 பஸ்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் நகர்புறங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் நிர்பயா பாதுகாப்பு நகரம் என்ற திட்டத்தினை உருவாக்கியுள்ளது. இதனை செயல்படுத்துவதற்காக அஹமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்மை ஆகிய 8 நகரங்களை தேர்ந்தெடுத்துள்ளது. இந்த திட்டத்தை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல்துறையுடன் இணைந்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் சென்னை இடம்பெறுவதற்கு, வேகமாக வளரக்கூடிய நகரங்களில் ஒன்றாக இருப்பதே காரணம். தகவல் தொழில்நுட்பம், நிதித்துறை, ஆட்டோமொபைல் மற்றும் இதனுடன் தொடர்புடைய துறைகள் அபரிமிதமான வளர்ச்சியை எட்டும் நிலையில் சென்னை உள்ளது. இங்குள்ள மொத்த மக்கள் தொகையில் வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை குறிப்பிட்ட சதவீதம் அளவிற்கு உள்ளது. எனவே இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் எம்டிசி (மாநகர் போக்குவரத்துக் கழகம்) பஸ்களின் பாதுகாப்பு வசதியினை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 2,800 பஸ்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன்மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கண்காணித்தல், கண்டறிதல், எச்சரிக்கை செய்ய முடியும். மேலும் அவற்றை பதிவு செய்யவும் முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சோதனை ஓட்டம்
பூந்தமல்லியிலிருந்து பிராட்வே செல்லும் பஸ்சில் டிரைவர் இருக்கைக்கு நேர் எதிரே, கடைசி இருக்கை அருகே என இரு இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பேருந்தின் வெளியே முன்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வோரையும், சாலை ஓர நிகழ்வுகள், பஸ்ஸை முந்திச்செல்லும் வாகனத்தின் நடவடிக்கையும் எளிதாக கண்காணிக்க முடியும். இது போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பணிகள் நிறைவடைந்த பிறகு மற்ற அனைத்து அரசு பஸ்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Tags : MTC ,crimes ,children ,women , Women, child, crime, MTC bus, surveillance camera
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...