×

திரும்பி செல்ல முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு சீன அரசு அறிவுரை: ‘கல்வி நிறுவனங்களுடன் தொடர்பில் இருங்கள்’

பீஜிங்: சீனாவில் படிக்கும் இந்திய மாணவர்கள், தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும்படி சீன அரசு வலியுறுத்தி உள்ளது. கடந்த ஆண்டு புள்ளி விபரத்தின்படி சீனாவில் உள்ள கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 23 ஆயிரம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் 21 ஆயிரம் பேர் மருத்துவம் படிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலான மாணவர்கள் கடந்த ஜனவரியில் சீன புத்தாண்டு விடுமுறையின்போது இந்தியா திரும்பினர். அதே நேரத்தில் அங்கு கொரோனா நோய் தொற்று பரவத் தொடங்கியதோடு, சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால், இந்தியா திரும்பிய மாணவர்கள் அனைவரும் படிப்பை தொடர முடியாமல் தவிக்கின்றனர். இவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு, எதிர்காலம் பாதிக்கும் பிரச்னையை சீன அரசின் கவனத்துக்கு சீனாவில் உள்ள இந்திய தூதரகம் எடுத்துச் சென்றது. இந்நிலையில், சீன கல்வி நிறுவனங்களில் படிக்கும் இந்திய மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களோடு தொடர்ந்து தொடர்பில் இருக்கும்படி சீனா அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக, இந் திய தூதரகத்துக்கு சீனாவின் கல்வி துறை எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:

* தற்போது, வெளிநாட்டு மாணவர்கள் சீனாவுக்கு வர முடியாது.
* அந்த மாணவர்களின் நியாயமான உரிமைகள், நலன்களை பாதுகாப்பதற்கு சீன அரசு பெரும் முக்கியத்துவம் அளிக்கிறது.
* சீன கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள், அந்தந்–்த கல்வி நிறுவனங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

* பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக நடப்பு கல்வி ஆண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* சீனாவில் கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட சூழல் இன்னும் சரியாகவில்லை.
* சீனாவுக்குள் நுழைவது, வெளியேறுவதற்கான கொள்கைகள் படிபடியாக சரி செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கவனமாக பாருங்கள்
சீனாவின் இந்த கடிதத்தை தொடர்ந்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘சீனாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள், அங்குள்ள இந்திய தூதரகத்தின் இணையதளம் மற்றும் அதன் சமூக வலைதள செய்திகளை தினமும் கவனத்துடன் பார்க்க வேண்டும்,’ என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags : institutions ,government ,Chinese ,Indian , Indian Student, Chinese Government, Educational Institutions
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரியில் 17வது ஆண்டு விழா