20 லட்சம் ஏக்கர் வனப்பகுதி நாசம்; கபளீகரமானது கலிபோர்னியா: காட்டுத் தீ கோரத்தாண்டவம்

ஷவர் லேக்: கலிபோர்னியாவில் எரிந்து வரும் காட்டுத்தீயின் கோரத்தாண்டவத்தால் இதுவரை 20 லட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலாகி உள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் சான் பிரான்சிஸ்ேகா வளைகுடா பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதை அணைக்கும் பணியில் வனத்துறை, தீயணைப்பு துறையும் இணைந்து, இதை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள 21 நகரங்களில் ஒரு லட்சத்து 58 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

மின்சார ஒயர்கள் மின் உபகரணங்கள் மூலமாக புதிதாக தீ விபத்து ஏற்படுவதை தடுக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீ வேகமாக பரவுவதால், இந்த மாகாணத்தில் உள்ள 8 தேசிய காடுகளில் மக்கள் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. காட்டுத் தீயால் மாகாணம் முழுவதும் வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால், மற்ற பகுதிகளிலும் புதிதாக தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த சனியன்று மம்மூத் நீர்தேக்கம் அருகே உள்ள பகுதியில் இருந்து 2 ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக 214 பேர் மீட்கப்பட்டனர். இதில், 12 பேரின் நிலை மோசமாக உள்ளது. இந்த மாகாணத்தில் கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கி இதுவரை 900 முறை காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள தீயின் கோரத்தாண்டவத்தால் 20 லட்சம் ஏக்கர் பச்சைப் பசேல் வனப்பகுதி எரிந்து நாசமாகி இருக்கிறது.

காரணம் இது தானாம்

லாஸ் ஏஞ்செல்சில் உள்ள  யுகாய்பா பகுதியில் அடையாளம் தெரியாத தம்பதி, தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிவிக்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்தனர். இதற்காக உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தனர். பொதுவாக, கருவில் இருப்பது பெண் குழந்தையாக இருந்தால் இளஞ்சிவப்பு (பிங்க்) நிற புகையும், ஆண் குழந்தை என்றால் நீல நிறப் புகை வெளிப்படுத்தப்படும். இந்த புகையை வெளியிட பயன்படுத்தப்படும் கருவியில் இருந்து கிளம்பிய தீப்பொறிதான், இவ்வளவு பெரிய தீ விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

* கலிபோர்னியாவில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டு தீ, இதுவரை நடந்துள்ள தீ விபத்துகளில் மிகப்பெரிதாக கருதப்படுகிறது.

* இந்த காட்டுத்தீ ஒரே நாளில் 15 மைல்கள் அதாவது 24 கிமீ  தூரத்துக்கு  பரவியது.

* இதில், 56 சதுர மைல்கள் அதாவது 145.04 சதுர கிமீ சுற்றளவுக்கு எரித்து சாம்பலாக்கியது. கலிபோர்னியாவில் கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத் தீயில்19.6 லட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமானது.  ஆனால், இந்தாண்டு 20 லட்சம் ஏக்கர் வனப்பகுதி நாசமாகி இருக்கிறது.

Related Stories:

>