×

வலுவாக உணர்கிறேன்... ரபாடா உற்சாகம்

துபாய்: ஊரடங்கு காலத்தில் கிடைத்த ஓய்வில் உடல்தகுதியை மேம்படுத்திக் கொண்டதால் வலுவாக இருப்பதாக உணர்கிறேன் என்று டெல்லி கேப்பிடல்ஸ் வேகப் பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா (தென் ஆப்ரிக்கா) கூறியுள்ளார். ஐபிஎல் டி20 தொடர் வரும் 19ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணி வீரர்களும் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் செப். 20ம் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. டெல்லி அணிக்காக விளையாட உள்ள ரபாடாவின் தனிமைப்படுத்தல் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து பயிற்சியை தொடங்கிய அவர் கூறியதாவது: களத்தில் இறங்கி ஓடுவதும், சக வீரர்களுடன் பயிற்சி செய்வதும் உற்சாகம் அளிக்கிறது.

ஊரடங்கு காலத்தில் உடல்தகுதியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது நல்ல பலனை தந்துள்ளது. முன்பை விடவும் வலுவாக உணர்கிறேன். பந்துவீசுவது எப்படி என்பதை மறந்துவிடவில்லை என்று உறுதி செய்வதற்காக இனி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபடுவேன். ஐந்து மாதமாக விளையாடாமல் இருந்துவிட்டு திடீரென களமிறங்குவது எல்லோருக்குமே புதிய அனுபவம் தான். கடந்த சீசனில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். மனரீதியாக அது எங்களின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. அதே சமயம் இந்த தொடரை புதிதாகத் தொடங்கி விளையாடும் சவாலுக்கு தயாராக இருக்கிறோம். வெற்றிகளைக் குவித்து கோப்பையை முத்தமிடுவோம் என நம்புகிறேன். இவ்வாறு ரபாடா கூறியுள்ளார்.


Tags : Feeling strong, Rabada
× RELATED சில்லிபாயின்ட்..