×

யுஎஸ் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் செரீனா: போபண்ணா ஏமாற்றம்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) தகுதி பெற்றார். நான்காவது சுற்றில் கிரீஸ் நாட்டின் மரியா சக்கரியுடன் மோதிய செரீனா 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த சக்கரி 7-6 (8-6) என டை பிரேக்கரில் வெற்றியை வசப்படுத்த 1-1 என சமநிலை ஏற்பட்டது. பரபரப்பான 3வது செட்டில் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திய செரீனா 6-3, 6-7 (6-8), 6-3 என வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி, 28 நிமிடத்துக்கு நீடித்தது. விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்), எலிஸ் மெர்டன்ஸ் (பெல்ஜியம்), ஸ்வெடனா பிரான்கோவா (பல்கேரியா) ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் 2ம் நிலை வீரர் டொமினிக் தீம் (ஆஸ்திரியா) 7-6 (7-4), 6-1, 6-1 என்ற நேர் செட்களில் கனடாவின் ஆகர் அலியாஸிமியை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார். முன்னணி வீரர்கள் டானில் மெட்வதேவ் (ரஷ்யா), ஆந்த்ரே ருப்லெவ் (ரஷ்யா), அலெக்ஸ் டி மினார் (ஆஸி.) ஆகியோரும் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளனர். ஆண்கள் இரட்டையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் ரோகன் போபணா - டெனிஸ் ஷபோவலாவ் (கனடா) ஜோடி 5-7, 5-7 என்ற நேர் செட்களில் ஜூலியன் ரோஜர் (நெதர்லாந்து) - ஹோரியா டெக்காவ் (ருமேனியா) ஜோடியிடம் தோற்று வெளியேறியது.   


Tags : tennis quarterfinals ,US Open ,Serena ,Bopanna , US Open Tennis, Serena
× RELATED பாரிபா ஓபன் டென்னிஸ் காலிறுயில் ஸ்வியாடெக்