×

முன்னுரிமை துறை கடன் திட்டத்தால் பாதிப்பு; ரிசர்வ் வங்கி அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

சென்னை: வங்கிகள் கடன் வழங்கும்போது முன்னுரிமை அளிக்க வேண்டிய துறைகளுக்கான பட்டியலில் தொழில் முனைவோரையும் இந்திய ரிசர்வ் வங்கி இணைத்துள்ளது. கடன் வழங்குவதற்கான முன்னுரிமை பட்டியலில் மேலும் சில துறைகளை இணைத்து ரிசர்வ் வங்கி கடந்த 4ம் தேதி அறிவித்துள்ளது. அதில், வங்கிகள் கடன் வழங்குவதற்கான புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ரிசர்வ் வங்கியின் முன்னுரிமை துறைகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் சேர்க்கப்படவில்லை.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களும் (மாவட்டங்கள் பிரிப்பதற்கு முந்தைய நிலை) முன்னுரிமை மாவட்டங்களாக உள்ளன. ஆனால், ரிசர்வ் வங்கி அறிவித்த பட்டியலில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். இந்த இக்கட்டான நிதி நெருக்கடியான நிலையில் தமிழகத்தில் உள்ள துறைகளுக்கு கடன் வழங்க முடியாது, தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் முன்னுரிமை பட்டியலில் வரவில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்தை தனிமைப் படுத்துவது போலாகும்.

தமிழகத்தில் உள்ள மக்களும், தொழில் முனைவோர்களும் கடனை குறித்த நேரத்தில் திரும்ப செலுத்தும் மனப்பாங்கு கொண்டவர்கள். அவர்களுக்கு கடன் வழங்குவதில் முன்னுரிமை தரப்படவில்லை என்பதை ஏற்கமுடியாது. நல்ல தொழில் முனைவோர்களை ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு மூலம் தண்டித்துவிட வேண்டாம். எனவே, ரிசர்வ் வங்கியின் மாஸ்டர் திட்டத்தில் கூறப்பட்டுள்ள முன்னுரிமை துறைகளுக்கு கடன் வழங்கும் அறிவிப்பை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,Edappadi ,RBI , Reserve Bank, Prime Minister, Chief Minister Edappadi
× RELATED இன்னும் 9 நாளில் வாக்குப்பதிவு தமிழகம்...