×

வாங்கிய கடனை திருப்பி தராததால் விவசாயியை காரில் கடத்திய 5 பேர் சிக்கினர்: கூலிப்படையை அனுப்பியவருக்கு வலை

செங்கல்பட்டு: காஞ்சிபுரம் அடுத்த வையாவூரை சேர்ந்தவர் பார்த்தசாரதி (35). விவசாயி. நேற்று காலை பார்த்தசாரதி, செங்கல்பட்டில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு பைக்கில் சென்றார். பின்னர், வையாவூருக்கு புறப்பட்டார். பழைய சீவரம் அருகே சென்றபோது, எதிரே காரில் வந்த 5 பேர், பைக்கை மறித்து, அவரை சரமாரியாக தாக்கி, பார்த்தசாரதியை காரில் கடத்தி சென்றனர். இதை பார்த்ததும், அங்கிருந்த மக்கள், அவர்களை பிடிக்க முயன்றனர். அதற்குள் கார், மின்னல் வேகத்தில் பறந்தது. தகவலறிந்து பாலூர் போலீசார், கார் எண்ணை வைத்து செங்கல்பட்டு அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறித்து நிறுத்தினர்.

போலீசாரை கண்டதும் அதில் இருந்த 5 பேர் தப்பியோட முயன்றனர். ஆனால், அவர்களை போலீசார், சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், திண்டிவனத்தை சேர்ந்த ராஜதுரை (எ) மணிகண்டன்,(35) மாதவன் (30), ராஜரத்தினம் (35), மைக்கேல் (40), சந்தோஷ் (42) என தெரிந்தது. மேலும் விசாரணையில், இதில் திண்டிவனத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவரிடம், கடந்த 5 மாதங்களுக்கு முன் பார்த்தசாரதி ₹6.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ஆனால், அதற்கான வட்டியை செலுத்தவில்லை. இதுபற்றி பார்த்தசாரதியிடம், லட்சுமணன் கேட்டுள்ளார். அதற்கு பார்த்தசாரதி பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த லட்சுமணன், திண்டிவனத்தை சேர்ந்த கூலிப்படையினரிடம், பார்த்தசாரதியை கடத்தி வரும்படி கூறியுள்ளார். அதன்பேரில், கூலிப்படையை சேர்ந்த 5 பேரும் பார்த்தசாரதியின் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர், அங்கு இல்லை. இதையடுத்து அவர்கள், ஏமாற்றத்துடன் திண்டிவனம் நோக்கி சென்றபோது, பழையசீவரம் அருகே பைக்கில் சென்ற பார்த்தசாரதியை கண்டதும், அடித்து காரில் கடத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். தொடர்ந்து வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், பார்த்தசாரதியை கடத்துவதற்கு, கூலிப்படையை அனுப்பிய லட்சுமணனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Farmer, mercenary
× RELATED லஞ்சம் வாங்கிய ஆய்வாளர்கள் கைது