×

எண்ணூரில் இருந்து தூத்துக்குடி வரை எரிவாயு பைப்லைன் அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

மதுராந்தகம்: சென்னை எண்ணூரில் இருந்து தூத்துக்குடி வரை எரிவாயு கொண்டு செல்வதற்காக பைப் லைன் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதையொட்டி மேல்மருவத்தூர் அருகே மதூர், கோட்டகயப்பாக்கம் காட்டுக்கரணை, வேலமூர், ராமாபுரம் ஆகிய பகுதிகள் வழியாக பைப்லைன் அமைக்கப்படுகிறது. இதற்காக, இப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள், தனியார் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனால், தற்போது இந்த பகுதிகளில் உள்ள நிலங்களின் சந்தை மதிப்பை கூட வழங்காமல், மிகவும் குறைந்த விலைக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

மேற்கண்ட தலா கிராமத்தில் சுமார் 10 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாகவும், இந்த நிலத்துக்கு அரசு நிர்ணயித்துள்ள கைடுலைன் வேல்யூ எனப்படும் தொகையையும் தராமல் மிகுந்த குறைவான தொகையை வழங்குவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில், ராமாபுரம் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும்  மேற்பட்ட விவசாயிகள், நேற்று காலை பைப்லைன் அமைக்கப்படும் இடத்துக்கு சென்றனர். அங்கு, பைப்லைன் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், பைப்லைன் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எரிவாயு பைப்லைன் அமைக்கும் பணிக்காக எங்களது நிலத்தை, தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளது. அதை குறைந்த விலைக்கே பெற்று கொண்டனர். ஒரு ஏக்கருக்கு சுமார் ₹5 லட்சம் தருவதாக கூறினர். ஆனால், அதை 3 அல்லது 4 தவணைகளாக தருகின்றனர். அதையும் காசோலையாக கொடுத்து, வங்கியில் செலுத்தினால், பணம் இல்லாமல் திரும்பி வருகிறது. இதனால், நாங்கள் நிலத்தையும், இழந்து வாழ்வாதாரத்தையும் இழந்து ஏமாற்றப்பட்டுள்ளோம். எங்களது நிலத்துக்கு உரிய விலையை வழங்காமல் விவசாயிகளை ஏமாற்றும் நோக்கில் செயல்படும் நிறுவனத்தின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். எங்களது நிலத்தின் பகுதியில், பைப்லைன் அமைக்கும் பணியை தொடர கூடாது என்றனர்.


Tags : Thoothukudi ,Ennore , Ennore, Thoothukudi, gas pipeline construction work, public protest
× RELATED பசுமை வீடு கட்டும் இடத்தை ஒன்றிய ஆணையாளர் ஆய்வு