×

‘நான் உன்னைதான் காதலிக்கிறேன். நீ இல்லாமல் நானில்லை’... பேஸ்புக் மூலம் வாலிபர்களிடம் பணம் பறிப்பு: திருச்சி காதல் ராணி உட்பட 2 பேர் கைது: காதலன் உள்பட 5 பேருக்கு வலை

திருச்சி: திருச்சியில் பேஸ்புக் மூலம் பழகி காதலிப்பதுபோல் நடித்து நேரில் வரவழைத்து மிரட்டி பணம் பறித்த கல்லூரி மாணவி, 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மாணவியின் காதலன் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அங்கு செட்டிபாளையத்தை சேர்ந்தவர் வெற்றிசெல்வம். இவரது மகன் வினோத்குமார் (30). பிளஸ் 2 வரை படித்துள்ள இவர் அதே பகுதியில் பிரிண்டிங் பிரஸ் வைத்துள்ளார். இவருக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன் பேஸ்புக் மூலம் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் நண்பரானார். பேஸ்புக் மூலம் பழகி வந்த இவர்கள் நாளடைவில் வாட்ஸ் அப் மூலம் பேசி காதலித்து வந்தனர். திடீரென 3 மாதங்களாக மாணவி பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் வினோத்குமார் தவித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் மாணவியிடமிருந்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்தது. அதில், ‘‘நான் உன்னைதான் காதலிக்கிறேன். நீ இல்லாமல் நானில்லை. கவர்ச்சியான போட்டோக்களை அனுப்பியது நான் தான். உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை’’ என உருகி..உருகி.. பேசியுள்ளார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி போன் செய்து உன்னை ேநரில் பார்க்க வேண்டும் போல் உள்ளது என மாணவி கூறியுள்ளார்.இதனால் காதலியை பார்க்க அன்றே ஆவலுடன் வினோத்குமார் ₹2.30 மதிப்புள்ள விலை உயர்ந்த பைக்கில் காதலியை பார்க்க திருச்சி வந்தார். ஜங்ஷன் வந்ததும் அவர் காதலிக்கு போன் செய்துள்ளார். இதை நம்பாத மாணவி எதில் வந்தாய் என கேட்டதற்கு பைக்கில் வந்ததாக கூறி பைக்குடன் செல்பி எடுத்து மாணவிக்கு வாட்ஸ் அப் அனுப்பியுள்ளார். சரி அங்கேயே இரு வருகிறேன் என்றதால், வினோத்குமார் அரைமணி நேரம் காத்திருந்தார். ஆனால் மாணவி வரவில்லை.

மீண்டும் போன் செய்த மாணவி காஜாமலை அரபிக் கல்லூரி அருகே வரும்படி கூறியதால் வினோத்குமார் அங்கு சென்று காத்திருந்தார். அங்கும் வரவில்லை. பின்னர் நீன்டநேரத்துக்கு பின் மாணவி மீண்டும் போன் செய்து மதுரை ரோட்டில் உள்ள ராணுவ மைதானத்துக்கு வரும்படி கூறினார். இதனால் வினோத்குமார் அங்கு சென்று காத்திருந்தார்.அப்போது, அங்கு ஒரு ஆட்டோ வந்தது. அதிலிருந்து இறங்கிய 4 பேர், ‘‘நீ வினோத்குமார் தானே’’ என கேட்டனர். அவரும் ஆமாம் என்றார். மாணவி அழைத்து வர சொன்னதாக கூறி ஆட்டோவில் ஏற்றி சென்றனர். பைக்கை 2 பேர் பின்னால் ஓட்டிவந்தனர். பின்னர் கன்டோன்மென்ட் வஉசி ரோட்டில் உள்ள ஒரு வீட்டுக்கு அவரை அழைத்து சென்று பைக்கை பறித்துக்கொண்டு வீட்டுக்குள் அடைத்து வைத்து 1 லட்சம் தந்தால் விட்டுவிடுவதாக மிரட்டியுள்ளனர். பின்னர் கையால் சரமாரி தாக்கியுள்ளனர்.
இரவு அவரது ஏடிஎம் கார்டை பறித்துக்கொண்டு அவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகே உள்ள ஏடிஎம் மையத்துக்கு சென்றனர். அங்கு வினோத்குமாரிடம் ரகசிய எண்ணை வாங்கி போட்டு பார்த்தபோது அதில் பணம் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் ₹1 லட்சம் கொண்டு வந்தால் பைக்கை தருவதாக கூறி விரட்டிவிட்டனர்.

பேஸ்புக் பழக்கத்தால் ஏமாற்றப்பட்ட வினோத்குமார் இதுபற்றி கண்டோன்மென்ட் போலீசில் புகார் அளித்தார். அவர் கடத்தப்பட்டது கே.கே.நகர் பகுதி என்பதால் கே.கே.நகர் போலீசில் புகார் அளிக்கும்படி கூறி அனுப்பினர். இதையடுத்து வினோத்குமார் அங்கு சென்று புகார் அளித்தார். இந்த தகவலறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை தனிப்படை அமைத்து பிடிக்க உத்தரவிட்டார்.அதன்பேரில் தனிப்படை போலீசார் வினோத்குமாரிடம் பணம் ரெடியாக இருப்பதாக அந்த கும்பலுக்கு போன் செய்து வரவழைத்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவி மற்றும் 2 பேர் அங்கு வந்தபோது போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள், திருச்சி காஜாமலை முஸ்லீம் தெருவை சேர்ந்த அகமது மகள் ரகமத்நிஷா (20), மதுரை ரோடு வள்ளுவர் நகரை சேரந்த ஆசிக் என்ற நிவாஷ் (26), பாலக்கரை படையாச்சி தெருவை சேர்ந்த முகமதுயாசர் (22) என தெரியவந்தது. இதில் ஆசிக் நிவாஷ் ஐஎன்எல் கட்சியின் திருச்சி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்.
மேலும், விசாரணையில் ரகமத்நிஷா காஜாமலை பகுதியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் அன்சாரி என்பவரை காதலித்து வருகிறார். அவர்களுக்கு கடந்த 3ம் தேதி நிச்சயம் முடிந்துள்ளது.காதலனுடன் சேர்ந்து மாணவி தஞ்சை, முசிறி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வாலிபர்களிடம் பேஸ்புக் மூலம் பழகி நேரில் வரவழைத்து மிரட்டி பணம், பொருட்களை பறித்து வந்துள்ளார்.

இதற்கு அஜிஸ், சித்திக், அன்சாரிலால், உசேன் ஆகிய 4 பேரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதையடுத்து மாணவி உள்பட 3 பேரையும் நீதிமன்றத்தில் போலீசார் மாணவியை மகளிர் சிறையிலும், மற்ற 2 பேரை மத்திய சிறையிலும் அடைத்தனர். மேலும் மாணவியின் காதலன் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.பேஸ்புக் மூலம் பழகி ஆண்களிடம் கல்லூரி மாணவி கும்பலுடன் பணம் பறித்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : queen ,teenagers ,Trichy , ‘I love you., Facebook,Trichy ,love, queen,
× RELATED சென்னை ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் காவல் ஆணையர் ஆய்வு!!