×

புதுவையில் பயங்கரம்: கதர்வாரிய அதிகாரி சரமாரி வெட்டிக் கொலை

புதுச்சேரி: புதுச்சேரியில் மர்ம கும்பலால் கதர்வாரிய அதிகாரி சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வாழை குளம் சின்னையாபுரம் அக்காசாமி மடம் வீதியை சேர்ந்தவர் கணேசன் (49). கதர்வாரியத்தில் செயல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். காங்கிரஸ் பிரமுகரான இவர், ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணனின் தீவிர ஆதரவாளர். நேற்று மாலை 6 மணியளவில் அவர், ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, வாழைகுளம் சின்னையாபுரம் மாரியம்மன் கோயில் வீதி வழியாக வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மாரியம்மன் கோயில் வீதியை ஒட்டிய சிறிய சந்தில் மறைந்திருந்த ஒரு கும்பல், அவரை வழிமறித்து கட்டையால் தாக்கியது. இதில் கணேசன் கீழே விழுந்தார். பின்னர் அவரை, அந்த கும்பல் சரமாரி அரிவாளால் வெட்டியது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் கணேசனுக்கு ரத்தம் அதிக அளவில் வழிந்தோடியது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.

தகவலறிந்த முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய கணேசனை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய் அங்கு மோப்பம் பிடித்து, அங்குமிங்கும் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதற்கிடையே, போலீஸ் ஐஜி சுரேந்தர் சிங் யாதவ், சீனியர் எஸ்பி பிரதிக்‌ஷா கொடாரா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

தேர்தலில் எம்எல்ஏவுக்கு ஆதரவாக தீவிரமாக கட்சி பணியாற்றியதில் அவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து, முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இதற்கிடையே, கணேசன் கொலையை கண்டித்து அஜந்தா சிக்னல் சந்திப்பில் நேற்று இரவு 8.30 மணியளவில் சின்னையாபுரம் பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த லட்சுமி நாராயணன் எம்எல்ஏ., மற்றும் போலீசார் அங்கு வந்து சமரச பேச்சு நடத்தியதன் பேரில் போராட்டத்தை கைவிட்டனர். ஆளும்கட்சி எம்எல்ஏவின் தீவிர ஆதரவாளரும், கதர்வாரிய அதிகாரியுமான கணேசன் படுகொலை செய்யப்பட்டது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : officer ,Kadarwari ,murder ,Puducherry , Puducherry, murder
× RELATED பணத்துக்காக கடத்திய சிறுவனை பெட்ரோல்...