×

காற்றில் பறக்கும் அதிகாரிகள் எச்சரிக்கை: கழிவுநீரை ஓடைகள் வழியாக வெளியேற்றும் சாயப்பட்டறைகள்

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் அதிகாரிகளின் எச்சரிக்கையை காற்றில் பறக்க விட்டு, சாயப்பட்டறைகள் ஓடைகள் வழியாக கழிவுநீரை வெளியேற்றி வருவது, பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஜவுளித்தொழிலுக்கு தேவையான துணி மற்றும் நூல்களுக்கு சாயமேற்றும் பணிகளை, பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையத்தில் உள்ள 125 சாயச்சாலைகள் மேற்கொண்டுள்ளன. இந்த சாயச்சாலைகள் அனைத்தும், முறையான இயந்திரங்களை கொண்ட தரமான சுத்திகரிப்பு நிலையங்களாகும். சாயமிடும் பணியில் வெளியாகும் கழிவுநீரில் உள்ள ரசாயன உப்புகளையும், நீரையும் இயந்திரங்கள் மூலம் பிரித்து, ரசாயன கழிவுவை திடமாகவும், நீரை திரவமாகவும் வெளியேற்றப்படுகின்றன. சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியாகும் திடக்கழிவுகளை உலற வைத்து, அருகில் உள்ள சிமெண்ட் ஆலைகளுக்கு வழங்க வேண்டும். பூஜ்ஜியம் நிலையில் ரசாயனம் இல்லாமல் பிரிக்கப்பட்ட நீரை, மீண்டும் தங்களது சாயப்பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும், நீரையோ, கழிவுகளையோ வெளியேற்ற கூடாது என மாசுகட்டுப்பாடு வாரியம் கடுமையாக எச்சரித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 4 நாட்கள் முன்பு பள்ளிபாளையத்தில் நடைபெற்ற சாயச்சாலை உரிமையாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில், விதிமீறும் நிறுவனங்கள் குறித்து கண்டறியப்பட்டால், உடனடியாக மின்இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், சாயப்பட்டறைக்கு சீல் வைக்கப்படும் என குமாரபாளையம் மாசுகட்டுப்பாடு வாரிய தலைமை பொறியாளர் செல்வகுமார் எச்சரித்தார். ஆனால், அவரது எச்சரிக்கையை குமாரபாளையம் சாயச் சாலைகள் கொஞ்சமும் மதிக்கவில்லை. வழக்கமாக கழிவுநீரை சுத்தப்படுத்தி வெளியேற்றும் சாயப்பட்டறைகள், நேற்று கழிவுநீரை சுத்தப்படுத்தாமலேயே சாக்கடை மற்றும் ஓடைகள் வழியாக வெளியேற்றின. இதனால், பல லட்சம் லிட்டர் சாயக்கழிவுநீர் சாக்கடை, ஓடை வழியாக காவிரி ஆற்றில் கலந்தது.சாயக்கழிவுநீரை சுத்தப்படுத்தி மறு உபயோகப்படுத்தி கொள்வதால், காவிரி ஆறு மாசுபடுவது தவிர்க்கப்படும் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு, இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, விதிமுறை மீறி செயல்படும் சாயச்சாலைகளின் மின் இணைப்பை துண்டித்து, சீல் வைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Tags : streams ,Dyehouses ,Dyeing Workshops ,Kumarapalayam , Dyeing Workshops, Kumarapalayam
× RELATED பொதுமக்கள் பாராட்டு கறம்பக்குடி...