×

புதுவைக்குள் அனுமதிக்கப்படாத தமிழக அரசு பஸ்கள்: எல்லையில் பயணிகள் பரிதவிப்பு

புதுச்சேரி: கொரோனா ஊரடங்குக்கு பிறகு, தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே நேற்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியது. தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த பஸ்கள் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படாததால், கோரிமேடு எல்லையில் பயணிகளை இறக்கிவிட்டு திரும்பிச் சென்றன. அங்கிருந்து பயணிகள் நடந்து புதுச்சேரிக்குள் வந்தனர். இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதேபோல் புதுச்சேரியில் உள்ள தமிழக அரசு பணிமனைகளில் இருந்து எந்த பேருந்தும் இயக்கப்படவில்லை. இதனால் தமிழக பஸ்களை எதிர்பார்த்திருந்த புதுச்சேரி மக்கள் ஏமாற்றத்திற்குள்ளாகினர்.

ஆனால் சென்னையில் இருந்து கடலூர், சிதம்பரம், நாகை உள்ளிட்ட பகுதிக்கு செல்ல வேண்டுமெனில் புதுச்சேரி வழியாகத்தான் தமிழக அரசு பஸ்கள் செல்ல வேண்டும். இந்த பஸ்களை இடையில் நிறுத்தாமல் புதுச்சேரி வழியாக இயக்க இருமாநில அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதும் தமிழக பஸ்கள், புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்பட உள்ளன.

இதனிடையே புதுவையில் இருந்து தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்தை தொடங்குவது தொடர்பாக அரசு தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. புதுவையில் தனியார் பஸ்கள் அதிகளவில் உள்ள நிலையில், தற்போதுள்ள அரசு விதிகளின்படி பஸ்களை இயக்கினால் நஷ்டம் ஏற்படும் எனக்கூறி தனியார் பஸ்களை இயக்க அதன் உரிமையாளர்கள் இதுவரை முன்வரவில்லை. எனவே பிஆர்டிசி பஸ்களை கடலூர், விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்க வேண்டுமென பொதுமக்களிடமிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.

இந்த நிலையில் தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் அரசு, தனியார் பஸ்களை இயக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர், அதிகாரிகள் முதல்வர் நாராயணசாமி விரைவில் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் புதுச்சேரி பஸ்களை தமிழக பகுதிகளில் இயக்க அம்மாநில அரசிடம் அனுமதி கேட்பது, அரசு மற்றும் தனியார் பஸ்களை மீண்டும் முழுமையாக இயக்க நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. புதுச்சேரி பஸ் நிலையம் 5 மாதமாக மூடப்பட்டு அங்கு தற்போதுவரை தற்காலிக காய்கறி அங்காடி செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu ,Passengers ,border ,Pondicherry ,Corona , Pondicherry, Corona
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...