×

வாணியம்பாடி அருகே குட்டையில் மூழ்கி பலியான வாலிபர் சடலம் 22 மணிநேரம் போராடி மீட்பு

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி பலியான வாலிபர் சடலத்தை தேசிய பேரிடர், தீயணைப்பு வீரர்கள் 22 மணிநேரம் போராடி மீட்டனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பாரத் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது தாய் கனகம்மாள் கடந்த வாரம் உடல்நலக்குறைவால் இறந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் ஊசி தோப்பு பகுதியில் உள்ள கல்குவாரி அருகே திதி கொடுத்து கொண்டிருந்தனர்.

அப்போது ராஜாவின் மாற்றுத்திறனாளி மகன் தமிழ்செல்வன்(25) அங்கு உள்ள கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக இறங்கியுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் அவர் திரும்பி வர முடியாமல் நீரில் மூழ்கினார். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு நேரம் ஆனதால் மீட்க முடியாமல் திரும்பி சென்றனர். பின்னர். நேற்று காலை அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழு கமாண்டோ மகாவீர் சிங் தலைமையில் 13 பேரை  வரவழைத்து வாலிபரின் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து திருப்பத்தூர், ஆலங்காயம், ஆம்பூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 50 தீயணைப்பு வீரர்கள் வேலூரில் இருந்து வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து படகுகள் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று மாலை 5.30 மணியளவில் சுமார் 22 மணிநேரம் கழித்து தமிழ்ச்செல்வனின் சடலத்தை மீட்டனர். சம்பவ இடத்தை எஸ்பி விஜயகுமார், ஆர்டிஓ காயத்திரி சுப்பிரமணியம், தாசில்தார் சிவப்பிரகாசம், டிஎஸ்பி பழனிசெல்வம் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் சடலத்தை கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவ அனுப்பிவைத்தனர்.

Tags : Vaniyambadi ,pond ,Firefighters ,National Disaster , Vaniyambadi, National Disaster, Firefighters
× RELATED வாணியம்பாடியில் பணப்பட்டுவாடா!:...