×

காவிரி குடிநீர் வழங்காததால் தொட்டிக்கு இறுதி சடங்கு செய்து ஒப்பாரி வைத்த கிராமமக்கள்

சாயல்குடி: முதுகுளத்தூர் ஒன்றியம், விளங்குளத்தூர் பஞ்சாயத்தில் பருத்திக்குளம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. நெல், பருத்தி விவசாயம், ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். பெண்கள் நூறுநாள் வேலைக்கு சென்று வருகின்றனர். இதனால் வறுமை கோட்டிற்கு கீழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இக்கிராமத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக முறையாக வருவதில்லை. போர்வெல், கிணறு போன்ற உள்ளூர் நீர் ஆதாரங்களும் பயன்பாடின்றி கிடக்கிறது. இதனால் டேங்கரில் விற்கப்படும் தண்ணீரை குடம் ஒன்றிற்கு ரூ.6 விலை கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை இருப்பதாக கூறி கிராமத்தில் பயன்பாடின்றி கிடந்த குடிநீர் தேக்க தொட்டிகளுக்கு மாலை அணிவித்து, நூற்றுக்கணக்கான காலிகுடங்களுடன் பெண்கள் ஒப்பாரி வைத்து, இறுதி சடங்கு செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பருத்திக்குளம் பெண்கள் கூறும்போது, ‘‘பருத்திக்குளத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக முறையாக வருவது கிடையாது. உள்ளூர் நீர் ஆதாரங்களும் பயன்பாடின்றி கிடக்கிறது. கடந்த ஆண்டு பெய்த மழைக்கு கண்மாயில் கிடந்த தண்ணீரை பயன்படுத்தி வந்தோம். கோடை காலத்திலேயே வற்றிவிட்டது. இதனால் கிராமமக்கள் பயன்பாட்டிற்கு எவ்வித நீர் ஆதாரங்களும் இல்லாததால் டேங்கரில் கொண்டு வந்து விற்கப்படும் தண்ணீரை குடம் ரூ.6க்கு வாங்கி குடித்து வருகிறோம். அன்றாட கூலி தொழில் பார்த்து வரும் எங்களுக்கு விலைகொடுத்து வாங்க முடியவில்லை. வீட்டு உபயோகத்திற்காக முதுகுளத்தூர், பரமக்குடி மெயின் ரோட்டின் ஓரம் செல்கின்ற காவிரி குடிநீர் ஏர்வால்வு தொட்டியில் கசியும்நீரை மணிக்கணக்கில் காத்து கிடந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் தள்ளுவண்டியில் குடங்களை வைத்து தள்ளிக்கொண்டு வரும் நிலை உள்ளது.

பெரியவர்கள் கூலி வேலைகளுக்கு சென்றுவிடுவதால், தற்போது கொரோனா விடுமுறையில் வீட்டிலிருக்கும் மாணவர்கள் தண்ணீர் பிடிக்கு செல்கின்றனர். சாலையில் செல்லும் போது சற்று கவன குறைவு ஏற்பட்டாலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த ஊரில் குடிதண்ணீர் பிரச்னை இருப்பதால் பருத்திக்குளம் இளைஞர்களுக்கு வெளியூர்காரர்கள் பெண் கொடுக்க மறுக்கின்றனர். இதனால் தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்று சம்மந்தப்பட்டவர்களுக்கு பலமுறை புகார் கூறியும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கலெக்டர் குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : funeral rites ,Cauvery ,Sayalgudi , Funeral, Sayalgudi, drinking trough
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி