×

தடுப்பு சுவர்களும் சாய்ந்து ஆபத்தாக உள்ளது: ஏலகிரி மலை சாலையில் திடீர் விரிசல்

ஜோலார்பேட்டை: ஏலகிரி மலையில் உள்ள 10வது வளைவு சாலையில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. தடுப்பு சுவரும் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் அசம்பாவிதம் ஏற்படும் முன் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் இந்த ஏலகிரி மலையில் உள்ள 14 கொண்டை ஊசி வளைவுகளுக்கு தமிழ்புலவர்கள், கொடை வள்ளல்கள் என தமிழ் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. 14 வளைவுகளுக்கு ஏற்றவாறு 14 கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.

குளிர் காலத்திலும் கோடை காலத்திலும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை நிலவுவதால்  பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்திற்கு வந்து பல்வேறு இடங்களை கண்டு ரசித்து தங்கி செல்கின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கால் ஏலகிரி மலை சுற்றுலா தலத்தில் அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளது. ஆனாலும், இங்குள்ள மழை சாரல் வளைவுகள், இயற்கை சூழலை கண்டு ரசிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து தற்போது கார், இருசக்கர வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஏலகிரி மலை 10வது வளைவில் உள்ள மலைசாலை கீழே உள்ள 9வது சாலைக்கும், 10வது சாலைக்கும் சுமார் 40 அடி உயரத்தில் உள்ளது. 10வது சாலையில் உள்ள பார்வை மையம் அருகே தடுப்பு சுவர் ஓரத்தில் மலை சாலையில் சுமார் 20 அடி தொலைவிற்கு சாலை விரிசல் ஏற்பட்டு, தடுப்பு சுவர் உடைந்தும், சாய்ந்தும் ஆபத்தான நிலையில் உள்ளது.

தற்போது அடிக்கடி மழை பெய்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே சாலையில் பாறைக் கற்கள் சரிந்து விழுந்து கிடக்கிறது இதனை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 10வது வளைவில் ஆபத்தான சரிந்து விழும் நிலையில் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ஆபத்தான நிலையில் விரிசல் ஏற்பட்டுள்ள இடத்தை வெறும் சிமெண்ட் கலவை மூலம் பூசி மூடி மறைத்துள்ளனர். அந்த இடம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு துறை அதிகாரிகள் மூலம் சீரமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Yelagiri ,mountain road , Yelagiri, hill, road
× RELATED டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து...