×

ரயில், பஸ் போக்குவரத்து தொடங்கியதால் வெள்ளி வியாபாரிகளுக்கு கைகொடுக்கும் தமிழகம்

சேலம்: தமிழகத்திற்குள் ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து தொடங்கி இருப்பதால், வெள்ளி வியாபாரம் சுறுசுறுப்படைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழகத்திலேயே சேலத்தில் தான், வெள்ளிப்பொருட்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு வெள்ளி அரைஞாண்கொடி, கால்கொலுசு, குங்குமச்சிமிழ், வெள்ளி டம்ளர், மெட்டி, அஷ்டலட்சுமி குடம் உள்பட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப்பொருட்கள் 70 சதவீதம் டெல்லி, ஆக்ரா, கொல்கத்தா, மும்பை, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கிறது. மீதமுள்ள 30 சதவீத வெள்ளிப்பொருட்கள் தமிழத்தில் பல பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. வெள்ளி தொழிலை பொறுத்தமட்டில், ஆண்டு முழுக்க வியாபாரம் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக, வெள்ளி தொழில் முடங்கியது. பட்டறைகள் மூடப்பட்டதால் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்து வருமானமின்றி தவித்தனர்.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து வெள்ளிப்பட்டறைகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது. ஆனால், வெள்ளிக்கடைகளில் ஏற்கனவே இருந்த வெள்ளிப்பொருட்கள் விற்பனை ஆகாததால், பட்டறைகளில் உற்பத்தி குறைக்கப்பட்டது. மேலும் வெள்ளிப்பொருட்களை கொண்டு செல்ல ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து இல்லாததால், வெள்ளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஐந்து மாதத்திற்கு பிறகு ரயில் சேவையும், இரண்டு மாதத்திற்கு பிறகு பஸ் போக்குவரத்தும் தொடங்கி இருப்பதால், மீண்டும் வெள்ளி தொழில் சுறுசுறுப்படைய தொடங்கியுள்ளது. வெள்ளி வியாபாரிகள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு வெள்ளிப்பொருட்களை விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

இது குறித்து சேலம் வெள்ளி வியாபாரிகள் கூறியதாவது: சேலத்தில் செவ்வாய்பேட்டை, கந்தம்பட்டி, திருவாக்கவுண்டனூர், பள்ளப்பட்டி, சிவதாபுரம், பனங்காடு, சித்தர்கோயில், ஆண்டிப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான வெள்ளிப்பட்டறைகள் உள்ளன. இந்த பட்டறைகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். வெள்ளியை பொருளாக கொண்டு வர 22 நிலைகளை கடக்க வேண்டும். அப்போது தான் முழுமையான வெள்ளிப்பொருட்களாக கிடைக்கிறது. கடந்த மார்ச் மாதம் வரை வெள்ளி தொழில் நல்லமுறையில் செயல்பட்டு வந்தது. கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு வெள்ளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வெள்ளிப்பட்டறைகள் மூடப்பட்டதால், பல கோடி மதிப்பிலான வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த இரு மாதமாக வெள்ளிப்பட்டறைகள் செயல்பட்டு வருகிறது. ஆனால் பட்டறைகளில் நூறு சதவீதம் உற்பத்தி இல்லை. கடந்த இரண்டு மாதமாக 50 சதவீதம் உற்பத்தி மட்டுமே நடந்து வருகிறது. நேற்று முதல் தமிழகத்தில் ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து தொடங்கி இருப்பதால், நீண்ட நாட்களுக்கு பிறகு வெள்ளி வியாபாரிகள் சேலத்தில் இருந்து சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ளிப்பொருட்களை விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். கடந்த ஐந்தரை மாதமாக வியாபாரம் சரிந்த நிலையில், தற்போது ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து செயல்பட தொடங்கியுள்ளதால், வெள்ளி தொழில் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. தற்போது 30 முதல் 40 சதவீத வெள்ளிப்பொருட்களை விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். இதன் மூலம் மீண்டும் வியாபாரம் சுறுசுறுப்படைந்துள்ளது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Tags : Tamil Nadu ,silver traders , Train, bus, Friday
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...