×

காவல்துறையினருக்கு தெரியாமல் மணல் கடத்தல் நடக்க வாய்ப்பில்லை... அரசு அதிகாரிகளும் நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதில்லை : நீதிபதிகள் வேதனை!!

மதுரை : மணல் கடத்தலை தடுக்க நீதிமன்றம் எத்தனை உத்தரவுகள் பிறப்பித்தாலும் அதிகாரிகள் மதிப்பதில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கள்ளிடைக்குறிச்சியில் உள்ள ஓடைத்தடுப்பணையில் மணல் கடத்தப்படுவதைத் தடுக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுரையைச் சேர்ந்த சிவசங்கரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கள்ளிடைக்குறிச்சி பகுதியில் மேனுவல் ஜார்ஜ் என்பவர் எம். சாண்ட் உற்பத்திக்கு மட்டுமே அனுமதி பெற்றுள்ளார். ஆனால் அதிகாரிகள், அரசியல்வாதிகள் துணையோடு சட்டவிரோதமாக மணலை எடுத்து விற்று வருகிறார் ஜார்ஜ்.இரவு நேரங்களில் 200 முதல் 300 லாரிகள் வரை மணல் எடுத்து விற்பனை செய்து வருகிறார் ஜார்ஜ். இவ்வாறு மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொதுநல மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை சம்பந்தப்பட்ட பகுதி காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினருக்குத் தெரியாமல் மணல் கடத்தல் நடக்க வாய்ப்பில்லை. எனத் தெரிவித்தது.மேலும்  “மணல் கடத்தலை தடுக்க நீதிமன்றம் எத்தனை உத்தரவுகள் பிறப்பித்தாலும் அரசு அதிகாரிகள் அதனை மதிப்பதில்லை. இந்த மணல் கடத்தலால் நிலத்தடி நீா் ஆதாரம் அழிக்கப்படுகின்றன.” எனக் கவலைத் தெரிவித்துள்ளது. மணல் கடத்தல் தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செப்டம்பர் மாதம் 24ம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  முன்னதாக மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன்ஜாமீன் கிடையாது என சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Judges ,Government officials , Police, sand smuggling, government officials, judges, torture
× RELATED உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாஜி...