×

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.12 கோடி செலவில் நடந்து வரும் மகால் சீரமைப்பு பணியின்போது தரைத்தளம் சரிந்ததால் பரபரப்பு

மதுரை: மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ரூ.12 கோடி செலவில் மகாலில் சீரமைப்பு பணி நடந்தபோது தரைத்தளம் சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் ரூ.345 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பெரியார் மற்றும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் நிலையங்கள் ரூ.160 கோடி செலவில் நவீனப்படுத்தப்படுகிறது. ரூ.81 கோடி செலவில் ராஜா மில் சாலை துவங்கி குருவிக்காரன் சாலை வரையுள்ள வைகை ஆற்று கரையோர சாலை புனரமைப்பு, ரூ.40 கோடி செலவில் மீனாட்சி கோயில் அருகே பழைய காய்கறி மார்க்கெட் பகுதியில் வாகன காப்பகம், அங்காடி மையம் அமைகிறது.

ரூ.2.50 கோடியில் பெரியார் பஸ் நிலையம் அருகே சுற்றுலா தகவல் மையம், ரூ.22 கோடியில் புராதன சின்னங்களை இணைக்கும் புராதன வழித்தடம் அமைக்கப்படுகிறது. ரூ.4 கோடியில் ஜான்சிராணி பூங்கா அருகே சுற்றுலா பயணிகளுக்கான வருகை மையம் மற்றும் அங்காடி மையம், ரூ.8 கோடியில் குன்னத்தூர் சத்திரத்தில் வணிக வளாகம், ரூ.15 கோடியில் மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிய பகுதிகள் சீரமைப்பு என பலதரப்பட்ட பணிகள் நடக்கிறது. இப்பணிகளில் ஒன்றாக ரூ.12 கோடி செலவில் மதுரை திருமலைநாயக்கர் மகாலை சுற்றிய பகுதிகளை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

 இதன்படி, இப்பகுதியில் உள்ள துளசிராம் பூங்கா மற்றும் மகால் மையக் கட்டிடத்தைச் சுற்றிலும் புல்வெளித்தளம், தரையில் கற்கள் பதிக்கப்பட்டு நடைபாதை பணிகள் நடந்துள்ளன. அமர்வதற்கான இருக்கைகளும், கூரை வளைவுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு பணிகள் முடிக்கப்பட்டு, அதிகாரிகள் பலரும் ஆய்வு செய்து முடித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களாக மாலை நேரத்தில் மதுரையில் மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாத நிலையில், நடைபாதை தரைத்தளம் திடீரென சரிந்துள்ளது. இதனால் தரைத்தளப் பணியை மீண்டும் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை மக்கள் கூறும்போது, ‘‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரையில் தரமற்ற முறையில் பணிகள் நடந்து வருகின்றன. இதனை நிரூபிக்கும் வகையில் சிறு மழைக்கே தாங்காத வகையில் மகால் சுற்றுப்பகுதியில் தரைத்தளம் சரிந்திருக்கிறது. பணிகள் முடிக்கப்பட்டு ஒரு சில நாட்களிலேயே கட்டுமானம் பல்லிளித்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக மதுரையில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை சிறப்பு குழு அமைத்து முழுமையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : renovation work ,Smart City ,Madurai , Smart City, Madurai
× RELATED பாளை வஉசி விளையாட்டு அரங்கத்தில்...