×

பக்தர்கள் இல்லாமல் வேளாங்கண்ணி பேராலய தேர்பவனி: இணையதளத்தில் ஒளிபரப்பு

நாகை: கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இல்லாமல் வேளாங்கண்ணி பேராலய தேர்பவனி நேற்று இரவு நடந்தது. உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளையொட்டி 10நாட்கள் திருவிழா கொண்டாடப்படும். பல்வேறு நாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் வருவர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து வேளாங்கண்ணி திருவிழாவில் பங்கேற்பர். திருவிழா நடைபெறும் 10நாட்களும் வேளாங்கண்ணியில் கூட்டம் அலைமோதும்.

கொரோனா தொற்றால் பேராலயத்துக்கு பக்தர்கள் வருவதற்கு கடந்த மார்ச் மாதம் தடை விதிக்கப்பட்டதால், இந்தாண்டு வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. வேளாங்கண்ணிக்கு செல்லக்கூடிய 9 வழிகளும் அடைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் 29ம்தேதி வேளாங்கண்ணி பேராலய கொடியேற்றம் பக்தர்களின்றி நடந்தது. புதிய ஊரடங்கு தளர்வுகள் கடந்த 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதன்படி வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

கடந்த 2ம் தேதி முதல் வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வேளாங்கண்ணி பேராலயத்தில் உள்ளூர் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்தது. பக்தர்களின்றி பேராலய வளாகத்தை சுற்றி தேர்பவனி நடந்தது.

தேர்பவனியை தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து துவக்கி வைத்தார். இதில் பேராலய அதிபர் பிரபாகர் மற்றும் பலர் பங்கேற்றனர். இன்று (8ம் தேதி) அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. அதைதொடர்ந்து காலை 6 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படும். பின்னர் மாலை 7 மணிக்கு அன்னையின் திருக்கொடியிறக்கம் நடைபெறும். அதைதொடர்ந்து பேராலயத்தில் மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர், நன்றி அறிவிப்பு தொடர்ந்து தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படும். பேராலய அனைத்து நிகழ்ச்சிகளும் WWW.vailankannisharine.net என்ற இணையதளம் வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Tags : Devotees ,Velankanni ,Corona , Velankanni, Corona
× RELATED வெறிச்சோடிய வேளாங்கண்ணி