×

பென்னாகரம் அருகே வீட்டிற்கு செல்லும் வழியை மறித்து தீண்டாமை வேலி

பென்னாகரம்: பென்னாகரம் அருகே விவசாயி வீட்டிற்கு செல்லும் வழியை மறித்து, கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளதால் கடந்த 3 நாட்களாக அவரது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே தொண்ணகுட்டனஅள்ளி ஊராட்சி சிடுவம்பட்டி சேர்ந்த விவசாயி அர்ஜூனன்(36). இவரது மனைவி இளையராணி(30). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அர்ஜூனன், தனது வீட்டின் அருகே உள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டிற்கு சென்று வரும் வழியை அடைத்து, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர் கம்பிவேலி அமைத்துள்ளார். இதனால் அர்ஜூனன் குடும்பத்தினர் கடந்த 3 நாட்களாக, மளிகை பொருட்கள் வாங்கவோ, பிற தேவைகளுக்கோ வெளியே சென்று வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அர்ஜூனனின் சகோதரர் கம்பிவேலியின் மறுபுறத்தில் இருந்து தேவையான பொருட்களை வாங்கி மூட்டை கட்டி வீசி வருகிறார்.

தீண்டாமை சுவர் போல் வீட்டிற்கு செல்லும் பாதையை மறித்து, கம்பிவேலி அமைத்துள்ளதால், 3 நாட்களாக குழந்தைகளுடன் அர்ஜூனன் தம்பதியினர் தவித்து வருகின்றனர். ஆனால் எதிர்தரப்பை சேர்ந்தவர் தனது பட்டா நிலத்தில் தான் கம்பி வேலி அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதையடுத்து பென்னாகரம் தாசில்தார் சேதுலிங்கம் தலைமையில், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இது தரப்பினரும் தங்களது நிலம் தொடர்பான ஆவணங்களுடன் நேற்று மாலை பென்னாகரம் தாலுகா அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் வருமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து நேற்று இருதரப்பினருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அர்ஜூனன் தரப்பினர், வேலியை அகற்றி தங்களது வீட்டிற்கு சென்று வர வழி ஏற்படுத்தி தரும்படி கேட்டனர். வேலி அமைத்த மற்றொரு தரப்பினர் கூறுகையில், வேலி அமைக்கப்பட்டது தங்களுக்கு சொந்தமான பட்டா நிலமாகும். அதில் மற்றவர்களுக்கு வழி விட முடியாது என்று கூறினர். இதையடுத்து இருதரப்பினரும், இரண்டு நாள் அவகாசம் வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்ததால், அதிகாரிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.

Tags : house ,Pennagaram , Pennagaram, untouchability fence
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்