×

ஏரல் அருகே சிவகளையில் அகழாய்வு பணி: முதுமக்கள் தாழிகளில் நெல் மணிகள், மனித தாடையுடன் கூடிய பற்கள்

ஏரல்: ஏரல் அருகே சிவகளையில் நடந்து வரும் அகழாய்வு பணியில் முதுமக்கள் தாழிகளில் இருந்து 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள நெல் மணிகள், அரிசி மற்றும் மனிதனின் தாடையுடன் கூடிய பற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள சிவகளையில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள பரும்பு பகுதியில் தொல்லியல் களம் கண்டறியப்பட்டதையடுத்து அங்கு கடந்த மே 25ம் தேதி முதல் அகழாய்வு பணி துவங்கி நடந்து வருகிறது.

அகழாய்வு கள அதிகாரிகள் பிரபாகர், தங்கத்துரை ஆகியோர் தலைமையில் தொல்லியல்துறை ஊழியர்கள் மற்றும் உள்ளூர் பணியாளர்கள் என 50 பேர் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் சிவகளை பரும்பு பகுதியில் இருந்து தென்புறம் உள்ள வலப்பான்பிள்ளை திரட்டு பகுதியில் முன்னோர் வாழ்ந்த பகுதியை கண்டறியும் அகழாய்வு பணி கடந்த ஜூன் 28ம் தேதி தொடங்கப்பட்டது. இதில் 30 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகளை பரும்பு பகுதியில் 23 குழிகள், வளப்பான்பிள்ளை திரட்டில் 3 குழிகள் என 26 குழிகள் தோண்டப்பட்டு வந்த நிலையில் சிவகளை பரும்பு பகுதியில் மட்டும் 31 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த முதுமக்கள் தாழிகள் தமிழக தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தன் தலைமையில் கடந்த மாதம் 17ம் தேதி திறக்கப்பட்டது. தற்போது வரை 10க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த முதுமக்கள் தாழிகளில் சிறிய, சிறிய கிண்ணத்தில் இருந்து நெல்மணிகள், அரிசி, மனிதனை எரித்து வைத்த சாம்பல் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் முதுமக்கள் தாழிகளில் இருந்து மனித தாடை எலும்புடன் கூடிய பற்கள் உள்ளிட்ட பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனை அதிகாரிகள் சேகரித்து வைத்துள்ளனர்.

இந்த நெல் மற்றும் அரிசி பொருட்கள் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ளது என கூறப்படுகிறது. மேலும் மீதமுள்ள முதுமக்கள் தாழிகளையும் அதிகாரிகள் திறந்து உள்ளே உள்ள பொருட்களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இருந்து கிடைத்துள்ள தாடை எலும்பு துண்டுகள் மற்றும் பற்கள் அனைத்தும் மதுரை காமராஜர் பல்கலை கழகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு மரபணு பரிசோதனை நடத்தப்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம் இப்பகுதியில் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்தனர் என்பதும், இந்த மரபணுடைய மனிதர்கள் தற்போது எப்பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் தெரியவரும்.  இதனால் சிவகளை மக்களின் தொன்மையும், தாமிரபரணி ஆற்றின் பழமையும் விரைவில் தெரியவரும் என அதிகாரிகள் கூறினர்.

Tags : Sivakala ,Eral ,tombs ,Aral , Aral, Excavating
× RELATED ஏரல் பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கல்