×

கூலியை பிரிப்பதில் தகராறு; தலையில் கல்லை போட்டு கட்டிட மேஸ்திரி படுகொலை: ஆவடி அருகே பயங்கரம்

ஆவடி: சம்பள பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லை போட்டு கட்டிட மேஸ்திரி படுகொலை செய்யப்பட்டார். ஆவடி அடுத்த வெள்ளானூர், பார்கவி அவென்யூவில் டாக்டர் சந்தோஷினி என்பவருக்கு காலி மனை உள்ளது. இந்த மனையை சுற்றி சுற்றுச்சுவர் கட்டும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஊத்துக்கோட்டை, காந்தி தெருவை சேர்ந்த மாரிமுத்து (49) என்ற கட்டிடமேஸ்திரி செய்து வந்தார். இப்பணியில் அவருடன் சேர்ந்து ஆந்திராவை சேர்ந்த மோகன், பாபு, பாட்ஷா, வெங்கட்ராமன் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாரிமுத்துவிடம், அம்பத்தூர் புதூரை சேர்ந்த சூபர்வைசர் அதிஸ் என்பவர் வாரக்கூலியாக ரூ6 ஆயிரம் கொடுத்து சென்றார். பின்னர், ஒரு மணிநேரம் கழித்து மாரிமுத்து, அதிஸிக்கு போன் செய்து மேலும் ₹4 ஆயிரம் தரும்படி கேட்டார். இதன் பிறகு, அதிஸ்  இரவு 10 மணியளவில் மீண்டும் பணத்தை எடுத்து வந்தார். அப்போது, அங்கு உள்ள கொட்டகை அருகில் மாரிமுத்து, ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும், அவர் தலை மீது பெரிய கல் போட்டு கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து அதிஸ், ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சம்பள பணத்தை பங்கு பிரிப்பதில் மாரிமுத்துவிற்கும்,  தொழிலாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கலாம்.

அந்த தகராறில் குடிபோதையில் இருந்த அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த மாரிமுத்து மீது கல்லை போட்டு கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக போலீசார் மோகன், பாபு ஆகியோரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை தேடி தனிப்படை போலீசார் ஆந்திரா மாநிலத்திற்கு விரைந்துள்ளனர். அவர்களை பிடித்த பிறகு தான், கொலை தொடர்பாக மர்ம முடிச்சுகள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட மாரிமுத்துவுக்கு ரேவதி என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Dispute ,Avadi ,Architect , Coolie, Architect, Assassination, Avadi
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!