×

ஆடு தொட்டியில் அதிகாரி ஆய்வு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  இவர்கள் ஆடு, கோழி, மீன், நண்டு உள்ளிட்ட இறைச்சி  பொருட்கள் வாங்க வேண்டும் என்றால், பேரூராட்சி பின்புறம் உள்ள இறைச்சி கடைகளுக்கு வரவேண்டும். இந்நிலையில், கும்மிடிப்பூண்டி  தொகுதி எம்எல்ஏ சி.எச்.சேகர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ₹20 லட்சம் மதிப்பீட்டில் நவீன ஆடு அடிக்கும் தொட்டி  கடந்த 2012-2013ல் கட்டப்பட்டது. இதுவரை 7 ஆண்டுகள் ஆகியும்  திறக்கப்படவில்லை. அதனால், இறைச்சி கடை வியாபாரிகள் வெட்ட வெளியிலேயே ஆடுகளை வெட்டி விற்பனை செய்து வருகிறார்கள்.

கட்டி முடிக்கப்பட்டு, 7 வருடங்களாக  வீணாகும் ஆடு அடிக்கும் தொட்டிக்கு தேவையான உதிரிபாகங்களை வழங்க நிதி ஒதுக்க வேண்டும்  என ஊத்துக்கோட்டை பகுதி  வியாபாரிகள் தற்போதைய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ விஜயகுமாரிடம் மனு கொடுத்துள்ளனர்.  இதுகுறித்து நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.  இதையறிந்த, மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின்பேரில் திருவள்ளூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ் நேற்று ஊத்துக்கோட்டை பழைய பேரூராட்சி பின்புறம் உள்ள நவீன ஆடு அடிக்கும் தொட்டியை ஆய்வு செய்தார்.

பின்னர், இந்த ஆடு அடிக்கும் தொட்டிக்கு தேவையான கருவிகள் வாங்குவதற்கான மதிப்பீடு தயார் செய்து கொடுக்க பேரூராட்சி அலுவலர்களிடம் கூறினார். இந்த ஆய்வின்போது பேரூராட்சி தலைமை எழுத்தர் பங்கஜம், துப்புறவு மேற்பார்வையாளர் குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : inspection , Goat tank, official inspection
× RELATED மெரினா கடற்கரையில் அதிக கலர்...