×

தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னாவுக்கு திடீர் நெஞ்சுவலி: திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி

திருவனந்தபுரம்: தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள சொப்னாவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா முதலில் கொச்சியில் உள்ள காக்கநாடு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் இவருடன் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் எர்ணாகுளம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அங்கு பாதுகாப்பு இல்லை என்பதால் இவர்கள் அனைவரும் திருச்சூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று இரவு திடீர் என்று சொப்னாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தங்க கடத்தல் விவகாரத்தில் விசாரணை நடத்த விரைவில் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் திருவனந்தபுரம் வரவுள்ளனர். அவர்கள் அமீரக தூதரக ஊழியர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். கடந்த 3 தினங்களில் தங்க கடத்தல் ெதாடர்பாக என்ஐஏ 60க்கும் மேற்பட்டவர்களிடம் ரகசிய விசாரணை நடத்தி உள்ளது.

மேலும் அமீரக தூதரகத்தில் பணிபுரியும் இந்திய ஊழியர்கள் அனைவரையும் ரகசிய இடத்துக்கு அழைத்து விசாரணை நடந்தது. இதில் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய நபர்களில் ஒருவரான ரமீஸ் தங்கியிருந்த ஓட்டல்களிலும், அப்போது பணியில் இருந்த ஓட்டல் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் தலைமைச்செயலக கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் பரிசோதித்துள்ளனர். 


Tags : Sopna ,Thrissur Government Hospital , Gold, in kidnapping case, arrest, Sopna, chest pain, Thrissur Government Hospital, admission
× RELATED கடந்த ஆண்டு தங்க கடத்தலில் ஈடுபட்டதாக...