×

செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர் உத்தரவை மதிக்காத பிடிஓக்கள்: ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் அதிர்ச்சி

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில், கலெக்டர் உத்தரவை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மதிப்பதில்லை. அவரது உத்தரவை பின்பற்றுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி துறையில் நீண்டகாலமாக ஒரே இடத்தில் பணியாற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை, நிர்வாக வசதிக்காக கடந்த 26ம் தேதி, கலெக்டர் ஜான்லூயிஸ் பணிமாறுதல் செய்து உத்தரவிட்டார். அதன்படி ஊரக வளர்ச்சி துறையில் தணிக்கை துறை கண்காணிப்பாளராக இருந்த சார்லஸ் சசிகுமார், திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் சாய்கிருஷ்ணன், திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

அதே போன்று திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராமன், காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லீமாரோஸ் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர் கல்யாணி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டதால், அவரை காத்திருப்போர் பட்டியலில் வைத்து உத்தரவு பிறப்பித்தார். கலெக்டர் பணியிட மாற்றம் ஆணை பிறப்பித்து 10 நாட்களுக்கு மேலாகியும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கலெக்டரின் உத்தரவை மதிக்காமல், புதிய பணியிடத்துக்கு செல்லவில்லை. அதற்கான காரணத்தையும் மாவட்ட நிர்வாகத்திடம் இதுவரை தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கூறுகையில், நிர்வாக காரணங்களுக்காக, வட்டார வளர்ச்சி அலுவலர்களை  பணிமாறுதல் செய்து கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, 24 மணிநேரத்தில் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில், அவர்கள் பொறுப்பேற்க வேண்டும். ஊரக வளர்ச்சி அதிகாரிகளின் பணி மிக முக்கியமானது. ஆனால் பணி மாறுதல் உத்தரவிட்டு ஒரு வாரம் ஆகியும் சம்பந்தப்பட்ட இடத்தில் யாரும் சென்று பணியில் சேராமல் பழைய அலுவலகத்திலேயே அதிகாரிகளாக உள்ளனர். சிலர், அரசியல் தலையீடு காரணமாக மாற்று இடத்தில் செல்லாமல் உள்ளனர். திருப்போரூர், காட்டாங்கொளத்தூர் ஆகிய ஒன்றியங்கள் அதிக கல்லா கட்டும் ஒன்றியங்களாக உள்ளதால், அந்த இடங்களை விட்டுச்செல்ல தயங்குகின்றனர்.

வருவாய் துறையில் கடந்த மாதம் பல்வேறு தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் ஆகியோரை பணியிடம்  மாற்றி கலெக்டர் உத்தரவிட்டார். அவர்கள் மாற்றப்பட்ட இடங்களில் சென்று பொறுப்பேற்று கொண்டனர்.துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களும், கலெக்டரின் உத்தரவை ஏற்று செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு ஒன்றியத்தில் உள்ள அலுவலகங்களில் பணி செய்கின்றனர். ஆனால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மட்டும் கலெக்டர் உத்தரவை மதிக்காமல் அந்த இடங்களிலேயே அதிகாரிகளாக பணியாற்றுகின்றனர். எனவே கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர்களை, அவர்களது பணியிடங்களுக்கு சென்று நடவடிக்கை எடுக்க  செய்ய வேண்டும். அப்போதுதான் அடுத்த அதிகாரிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றனர்.

Tags : district ,PDOs ,Rural Development Department ,Chengalpattu ,Collector , Chengalpattu, Collector Order, PDOs
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்