பெண் நடுவர் மீது பந்தை அடித்ததால் ஜோகோவிச் தகுதிநீக்கம்: யுஎஸ் ஓபனில் பரபரப்பு

நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில், லைன் அம்பயர் மீது பந்தை அடித்து காயப்படுத்தியதற்காக நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயின் வீரர் பாப்லோ கரினோ புஸ்டாவுடன் மோதிய ஜோகோவிச், முதல் செட்டில் தனது சர்வீஸ் ஆட்டம் முறியடிக்கப்பட்டதால் (5-6) ஆத்திரமடைந்து தனது பாக்கெட்டில் இருந்த பந்தை களத்தின் பின்புறம் மிக வேகமாக அடித்தார். அது அங்கு நின்றிருந்த பெண் லைன் அம்பயரின் தொண்டை பகுதியை பலமாகத் தாக்கியது. சற்றும் எதிர்பாராத இந்த தாக்குதலால் நிலைகுலைந்த நடுவர் தடுமாறி கீழே விழுந்தார்.

தனது தவறை உணர்ந்த ஜோகோவிச் உடனடியாக அந்த நடுவரிடம் சென்று மன்னிப்பு கேட்டதுடன் ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து போட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நடுவர்கள், ஜோகோவிச் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அந்த நடுவரை தாக்கவில்லை என்றாலும் விதிமுறைகளுக்குப் புறம்பாக நடந்துகொண்டதால் தகுதிநீக்கம் செய்வதாக அறிவித்தனர். இதனால் ஜோகோவிச் மற்றும் அவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். நடுவர்களின் முடிவை ஏற்பதாக அறிவித்த ஜோகோவிச், ஏமாற்றத்துடன் வெளியேறினார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘எனது செயலால் பெண் நடுவருக்கு காயம் ஏற்பட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

இதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறே, இது எனக்கு சோகமான நாள். உள்நோக்கம் இல்லை என்றாலும் மிகவும் தவறான செயல் என்பதை உணர்கிறேன். தகுதிநீக்கம் ஏமாற்றமளித்தாலும், ஒரு வீரராகவும் மனிதனாகவும் என்னை மேம்படுத்திக் கொள்ள இந்த சம்பவம் நல்ல பாடமாக அமையும். எனக்கு ஆதரவாக இருந்த குடும்பத்தினர், அணியினர், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி... மன்னித்து விடுங்கள்’ என்று தகவல் பதிந்துள்ளார். யுஎஸ் ஓபனில் நட்சத்திர வீரர்கள் ரோஜர் பெடரர் (20 கிராண்ட் ஸ்லாம் வெற்றி), ரபேல் நடால் (19 கிராண்ட் ஸ்லாம் வெற்றி) பங்கேற்காத நிலையில், ஜோகோவிச் தனது 18வது வெற்றியை பதிவு செய்யும் வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுவிட்டதால், 2016ம் ஆண்டுக்குப் பிறகு கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் இந்த மும்மூர்த்திகள் தவிர்த்து புதிய சாம்பியன் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

* யுஎஸ் ஓபன் 4வது சுற்றுக்கு முன்னேறியதன் மூலமாக கிடைத்த தரப்புள்ளிகள், பரிசுத் தொகை அனைத்தையும் இழந்துள்ள ஜோகோவிச்சுக்கு அபராதமும் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

* ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கரினோ புஸ்டா (ஸ்பெயின்), டெனிஸ் ஷபோவலாவ் (கனடா), அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), போர்னா கோரிக் ( குரோஷியா) ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

* மகளிர் ஒற்றையர் பிரிவில் நவோமி ஒசாகா (ஜப்பான்), யூலியா புடின்ட்சேவா (கஜகஸ்தான்), ஷெல்பி ரோஜர்ஸ், ஜெனிபர் பிராடி (அமெரிக்கா) ஆகியோர் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர். முன்னணி வீராங்கனைகள் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), பெத்ரா குவித்தோவா (செக்.) 4வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.

Related Stories:

>