×

பங்குச்சந்தை முதலீட்டில் 8.3% நஷ்டம்; ரூ8,549 கோடி பிஎப் பணம் பாழாய் போச்சு: இந்த ஆண்டு கணிசமான வட்டி கிடைக்குமா?

சென்னை: மத்திய அரசு பங்குச்சந்தை இடிஎப் திட்டங்களில் முதலீடு செய்த பிஎப் பணத்தில் லாபம் கிடைப்பதற்கு மாறாக, முதலீட்டில் மதிப்பு 8.3 சதவீதம் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் சேர்ந்துள்ள பிஎப் பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் திட்டத்தை மத்திய அரசு 5 ஆண்டுக்கு முன்பு செயல்படுத்த துவங்கியது. பிஎப் நிதியில் சேரும் ஆண்டு டெபாசிட்டில் 85 சதவீதம் கடன் பத்திரங்களிலும், 15 சதவீதம் பங்குச்சந்தையில் இடிஎப் திட்டங்கள் மூலமாகவும் முதலீடு செய்யப்படுகிறது. முதன் முதலாக கடந்த 2015 ஆகஸ்ட் 5ம் தேதி, பங்குச்சந்தை இடிஎப் திட்டங்களில் முதலீடு தொடங்கியது.

கடந்த நிதியாண்டு இறுதியில், அதாவது கடந்த மார்ச் 31ம் தேதி வரை, இடிஎப் திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பிஎப் முதலீடு மொத்தம் ரூ1.05 லட்சம் கோடி. இதில் கடந்த 2017-18 நிதியாண்டில் ரூ2,686 கோடி விலக்கிக் கொள்ளப்பட்டது. இதன்படி மொத்த முதலீடு ரூ1.03 லட்சம் கோடியாக உள்ளது. மற்ற திட்டங்களை விட பங்குச்சந்தையில் முதலீடு செய்தால்தான் அதிக லாபம் கிடைக்கும் என அரசு தரப்பில் கூறப்பட்டது. மாறாக, முதலீட்டில் 8.3 சதவீதம் நஷ்டம் அடைந்து விட்டது. இதன்படி கணக்கீடு செய்தால், சுமார் ரூ8,549 கோடி பிஎப் பணம் நஷ்டம் அடைந்து விட்டது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரத்தில் கூறப்படுவதாவது: பாரத் 22 இடிஎப், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன இடிஎப் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் யுடிஐ மூலம் முதலீடு செய்யப்படும் இடிஎப் திட்டங்கள் அனைத்துமே நஷ்டம் அடைந்துள்ளன. அதிகபட்சமாக பொதுத்துறை நிறுவன இடிஎப் திட்டங்களில் மேற்கொண்ட முதலீட்டில் 24.36 சதவீதம் நஷ்டம் அடைந்துள்ளது. இதுபோல் பாரத் 22 இடிஎப்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டின் மதிப்பு 19.73 சதவீதம் குறைந்துள்ளது. ஒட்டு மொத்த அளவில் பங்குச்சந்தை இடிஎப் முதலீடு 8.3 சதவீதம் நஷ்டம் அடைந்துள்ளது என்றனர்.

பிஎப் பணத்துக்கு ஆண்டுதோறும் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2019-20 நிதியாண்டுக்கு வட்டி 8.5 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இன்னும் தொழிலாளர்களின் பிஎப் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில், பங்குச்சந்தை முதலீடு நஷ்டம் அடைந்துள்ளதால், நடப்பு நிதியாண்டுக்கான வட்டி மேலும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.

இடிஎப் பங்கு விற்பனை மூலம் ரூ6,000 கோடி திரட்ட முடிவு
கடந்த 2019-15 நிதியாண்டுக்கு பிஎப் வட்டி 8.5 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டது. இது இன்னும் வரவு வைக்கப்படவில்லை. பிஎப் நிதியில் 8.15 சதவீத வட்டி அளிக்க முடியும், எஞ்சிய 0.35 சதவீதத்தை இடிஎப் பங்கு விற்பனை மூலம் ₹6,000 கோடி திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் பெற, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நாளை நடக்க உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.

Tags : Stock market, loss, BP money, interest
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 475...