தமிழகத்தில் 5 மாதங்களுக்கு பிறகு பஸ், மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது: சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் பயணம்

சென்னை: தமிழகத்தில் 5 மாதங்களுக்கு பிறகு நீண்ட தூரம் பயணிகளை அழைத்துச் செல்லும் அரசு விரைவு பஸ்களின் சேவையும், மெட்ரோ ரயில் சேவையும் நேற்று துவங்கியது. தமிழகத்தில் மாவட்டத்திற்குள்ளான பேருந்துகள் கடந்த 1ம் தேதி முதல் இயங்கி வருகிறது. நேற்று முதல், எஸ்இடிசி (அரசு விரைவு போக்குவரத்துக்கழகம்) பஸ்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் பஸ்கள் இயங்க தொடங்கியது.முதல்நாளான நேற்று 241 எஸ்இடிசி பேருந்துகள் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டது. இதில் முன்பதிவு செய்து 4,000க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். முன்பதிவு செய்யாமல் நேரடியாக பஸ்களில் பலரும் பயணித்தனர்.

இதன்காரணமாக நேற்று 7,000க்கும் மேற்பட்டோர் அரசு எஸ்இடிசி பஸ்களில் மட்டும் பயணித்தனர். இவர்கள் அனைவரும் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டிற்கு வந்தவுடன் உடல் வெப்பநிலை குறித்து முதலில் ஆய்வு செய்யப்பட்டது. பிறகு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கிறதா என கேட்கப்பட்டது. அதன்பிறகே சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகே, பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். ஏறக்குறைய 5 மாதங்களுக்கு பிறகு பேருந்துகள் இயக்கப்படுவதால் சொந்த ஊருக்கு பலரும் பயணித்தனர். மேலும் இம்மாதம் முழுவதும் பல்வேறு தேதிகளில் பயணிப்பதற்காக 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மாவட்டங்களுக்கு இடையேயான டிஎன்எஸ்டிசி பஸ்களை பொறுத்தவரை 200க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன. இதில், 2,000க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். தொடர்ந்து இன்று பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால், கூடுதலாக பேருந்துகளை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

* மெட்ரோ சேவை துவக்கம்

சென்னையில் நேற்று காலை 7 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. விமானநிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு முதல் ரயில் சேவையை தொடங்கிவைத்தார். மெட்ரோ ரயிலில் பயணித்தார். முதல் நாளான நேற்று விமானநிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான நீலவழித்தடத்தில் மட்டுமே ரயில் போக்குவரத்து இருந்தது. கூட்ட நெரிசல் மிகுந்த காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையில் 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் வீதம் இயக்கப்பட்டது. மற்ற நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது. முகக்கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைத்து பயணிகளுக்கும் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை செய்யப்பட்டது.

ஊழியர்கள் பயணிகள் இடையே தொடுதல் உள்ளிட்டவைகளை தவிர்க்கும் வகையில் க்யூ-ஆர் கோடு டிக்கெட் வழங்கப்பட்டது. 32 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் க்யூ-ஆர் கோடு டிக்கெட்டை பயன்படுத்தி நிலையங்களுக்கு உள்ளே செல்லும் வகையில் தானியங்கி இயந்திரங்களும் வைக்கப்பட்டிருந்தது.முதல் நாளான இன்று மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்த ஏராளமான பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் இல்லை. வழக்கமாக காலை 7 மணி முதலே அலுவலகங்களுக்கு செல்ல மெட்ரோ ரயிலில் கூட்டம் அதிகரிக்கும். ஆனால், இன்று கூட்டம் இல்லாமல் இருந்தது. பயணிகளை ஒழுங்குபடுத்தி சமூக இடைவெளியுடன் நிலையங்களுக்குள் அனுமதிக்கும் பணியை ஊழியர்கள் செய்தனர். வரும் 9ம் தேதி பச்சை வழித்தடமான பரங்கிமலை-சென்ட்ரல் இடையே மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

Related Stories: