×

பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையால் மது அதிகமாக கொடுத்து ஆட்டோ டிரைவர் கொலை: நண்பன் கைது

சென்னை: தி.நகர், மேட்லி சாலையை சேர்ந்தவர் தனசேகரன் (45), ஆட்டோ ஓட்டுனர். இவருக்கு ரோகினி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். தனசேகரன் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றதால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரோகினி குழந்தைகளுடன் வளசரவாக்கத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து, தனியாக வசித்து வந்த தனசேகரன் தினமும் நண்பரான விக்டர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ரமேஷ் ஆகியோருடன் சேர்ந்து அசோக் நகர் 7வது அவென்யூவில்  மது அருந்தி விட்டு வீட்டிற்கு செல்வது வழக்கம். கடந்த 5ம் தேதி இரவு மூன்று பேரும் ஒன்றாக மதுஅருந்தியுள்ளனர்.

போதை அதிகமானதால் தனசேகரன் வீட்டிற்கு செல்லாமல் அங்கேயே படுத்து உறங்கியுள்ளனர். விடிகாலை பார்த்தபோது தனசேகரன் இறந்து கிடந்துள்ளார். இதுதொடர்பாக நண்பர் விக்டர் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தனசேகரனின் உடலை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து அவரது நண்பர் விக்டரை விசாரித்தனர். அப்போது, சம்பவ இடத்தில் இருந்த மற்றொரு நண்பர் ரமேஷ் தூங்கி எழுந்து பார்த்தபோது அங்கு இல்லை என்று கூறியுள்ளார். அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் ஆகி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து  தலைமறைவாக இருந்த  ரமேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், தனசேகரனுக்கும், தனக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்து வந்தது. அதனால் கோபமடைந்து தனசேகரனுக்கு அதிக அளவில் மது ஊற்றி கொடுத்து, அவர் தூங்கியதும் நைலான் கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பினேன், என தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி ரமேஷை போலீசார் கைது செய்தனர்.

Tags : Auto driver ,murder , Payment, purchase issue, auto driver, murder
× RELATED மனைவியுடன் கள்ளத்தொடர்பு வாலிபர் வெட்டிக்கொலை: ஆட்டோ டிரைவருக்கு வலை