ரவுடி சங்கர் என்கவுன்டர் விவகாரம்; உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் உட்பட 7 பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்: 6 மணி நேரம் தொடர் விசாரணை

பெரம்பூர்: சென்னை அயனாவரம் நியூ ஆவடி சாலையில் கடந்த 21ம் தேதி ரவுடி சங்கர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அயனாவரம் காவல் ஆய்வாளர் நடராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த என்கவுன்டர் திட்டமிட்ட படுகொலை என சங்கரின் தாயார் கோவிந்தம்மாள் மற்றும் சங்கரின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதனையடுத்து சிபிஐ விசாரணை கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்பின்னர் கடந்த 3ம் தேதி உதவி ஆணையர் ராஜா, காவல் ஆய்வாளர் நடராஜ், உதவி ஆய்வாளர் யுவராஜ், காவலர்கள் முபாரக் வடிவேல், ஜெயப்பிரகாஷ் மற்றும் முருகன் ஆகிய 7 பேரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர்.

அதன்பேரில், உதவி கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 7 பேரும் நேற்று சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். இவர்களிடம், சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் கண்ணன் தனித்தனியே விசாரணை நடத்தினார்.

மேலும் விசாரணை விவரம்  அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. முன்னதாக அனைவரிடமும் சுமார் 25 கேள்விகள் அடங்கிய படிவம் வழங்கப்பட்டு எழுத்துப்பூர்வமாக பதில்கள் பதிவு செய்யப்பட்டன. சங்கரை சுட்டுக் கொன்ற இன்ஸ்பெக்டர் நடராஜிடம்  மட்டும் சுமார் ஒன்றரை மணிநேரம் துருவித் துருவி சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்ததாக கூறப்படுகிறது. பகல் 12 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 6.30 மணி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சங்கரின் குடும்பத்தினருக்கும் சம்மன் அனுப்பி அவர்களது தரப்பு விவரங்களை பெற சிபிசிஐடி போலீசார்  முடிவு செய்துள்ளனர்.

Related Stories:

>