×

கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் முதலிடத்தில் கேரளா கடைசியில் ஆந்திரா: 8வது இடத்தில் தமிழகம்

புதுடெல்லி: கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் பட்டியலில் கேரளாவை தவிர தென் மாநிலங்கள் பின்தங்கிய இடத்தை பெற்றுள்ளன. கேரளா 96.2 சதவீதத்துடன் முதலிடத்திலும், ஆந்திரா 66.4 சதவீதத்துடன் கடைசி இடத்தையும் பிடித்துள்ளன. தமிழகம் 8வது இடத்தில் உள்ளது. ஏழு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் கல்வி அறிவு பெற்றதை அடிப்படையாக கொண்டு தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் சர்வே முடிவை வெளியிட்டுள்ளது. இதில், தென் மாநிலங்களில் கேரளா மட்டுமே வழக்கம் போல் வலுவான இடத்தை பிடித்துள்ளது. 96.2 சதவீத படிப்பறிவுடன் கேரளா நாட்டிலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாநிலமாக உள்ளது.

அதைத் தொடர்ந்து டெல்லி 88.7 சதவீதத்துடன் 2வது இடத்திலும், உத்தரகாண்ட் 87.6 சதவீதத்துடன் 3வது இடத்திலும், இமாச்சல் பிரதேசம் 86.6 சதவீதத்துடன் 4வது இடத்திலும், அசாம் 85.9 சதவீதத்துடன் 5வது இடத்திலும் உள்ளன. பீகார் போன்ற மாநிலங்களை விட தென் மாநிலங்கள் கல்வியறிவில் பின்தங்கி இருக்கும் அதிர்ச்சி தகவல் இந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. குறிப்பாக ஆந்திரா 66.4 சதவீதத்துடன் நாட்டிலேயே குறைவான கல்வியறிவு பெற்ற மாநிலமாக கடைசி இடத்தில் உள்ளது. கடைசி 5 இடங்களில் உபி (73), தெலங்கானா (72.8), பீகார் (70.9), ராஜஸ்தான் (69.7), ஆந்திரா (66.4) ஆகிய மாநிலங்கள் உள்ளன. தமிழகம் 82.9 சதவீதத்துடன் 8வது இடத்தில் உள்ளது.

* நாடு முழுவதும் ஒட்டுமொத்த கல்வியறிவு சதவீதம் 77.7%ஆக உள்ளது.
* நகர்ப்புறங்களில் 87.7 சதவீதமாகவும் கிராமப்புறங்களில் 73.5%மாகவும் உள்ளது.
* ஆண்களின் கல்வியறிவு சதவீதம் 84.7 ஆகவும், பெண்கள் சதவீதம் 73.5 ஆகவும் உள்ளது.

Tags : Kerala ,states ,Andhra Pradesh ,Tamil Nadu , Literacy, Kerala, Andhra Pradesh, Tamil Nadu
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள்...