×

புதிய கல்விக்கொள்கை அமல்படுத்த கவர்னர்களுடன் ஜனாதிபதி, பிரதமர் ஆலோசனை: மாநிலங்கள் ஒத்துழைக்க மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: தேசிய கல்விக் கொள்கை குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தும், பிரதமர் மோடியும் அனைத்து மாநில கவர்னர்களுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் அனைத்து மாநிலங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தினார். நாட்டின் கல்வி முறையில் பல்வேறு சீர்த்திருத்தங்களுடன், 34 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேசியக் கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. பள்ளி கல்வியிலும், உயர் கல்வியிலும் பல்வேறு சீர்த்திருத்தங்களை செய்யவும், அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் வகையிலும் இந்த கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகி வருகிறது.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாடு முழுவதும் வீடியோ கான்பரன்சிங் மூலம் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு, அதன் சாதக, பாதகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை குறித்த கவர்னர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. ‘உயர்கல்வியை மாற்றியமைப்பதில் தேசிய கல்விக் கொள்கையின் பங்கு’ என்ற தலைப்பிலான இம்மாநாட்டை மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடக்கும் இம்மாநாட்டில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், அனைத்து மாநில கவர்னர்கள், கல்வி அமைச்சர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் பிரதமர் மோடி தொடக்க உரையாற்றினார்.

அதில் அவர் கூறியதாவது: நாட்டின் கல்விக் கொள்கை தொடர்பான விவாதங்கள் ஆரோக்கியமானவை. புதிய கல்விக் கொள்கையானது இளைஞர்களின் அறிவு மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.  மாணவர்கள் விரும்பும் கல்வியை கற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முன்பு, மாணவர்கள் தங்கள் திறனுக்கு அப்பாற்பட்டு ஒரு பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பார்கள். பின்னர் அதை காலம் கடந்து யோசிப்பார்கள். இப்பிரச்னைகள் தேசிய கல்விக் கொள்கையில் கருத்தில் கொண்டு தீர்க்க வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சிறு வயதிலிருந்து தொழிற்கல்வி அறிவை பெறுவதன் மூலம் நம் இளைஞர்கள் வாழ்க்கைக்கு சிறந்த முறையில் தயாராகி விடுவார்கள். மேலும் நடைமுறை கற்றலுடன் உலகளாவிய வேலைவாய்ப்பில் அவர்களின் பங்களிப்பும், இந்தியாவின் வேலைவாய்ப்பு திறனும் அதிகரிக்கும். ராணுவம், வெளியுறவுக் கொள்கை போன்றவற்றை போல கல்விக் கொள்கையும் அரசிற்கானது அல்ல, அது நாட்டின் நலனுக்கானது. கல்வி முறையில் மத்திய-மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு முக்கிய பங்கு உள்ளன. எனவே புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் அனைத்து மாநிலங்களும் ஒத்துழைக்க வேண்டும்.

இக்கொள்கைக்கு பல மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதே போல, அனைத்து மாநில அரசுகளிடமும் கருத்து கேட்கப்படும். புதிய கல்விக் கொள்கையில் அரசின் தலையீடானது குறைவாகவே இருக்கும். கற்றலில் மிகப்பழமை வாய்ந்த மையமாக இந்தியா விளங்குகிறது. 21ம் நூற்றாண்டில் அறிவார்ந்த மையமாக நாட்டை உருவாக்க தற்போதைய அரசு உறுதி பூண்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கையானது, பாடங்களை வெறுமனே படிப்பதற்கு பதில் ஆழமாக கற்கும் கற்றலில் கவனம் செலுத்துவதாகும். இதை அமல்படுத்துவதில் அனைவருக்கும் கூட்டு பொறுப்புள்ளது.

ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு கல்விக் கொள்கையுடன் அதிகப்படியான இணைப்பு உள்ளது. பொறுப்பும் உள்ளது.இக்கொள்கை குறித்த அனைத்து சந்தேகங்களையும் தீர்க்க விரும்புகிறோம். சிறந்த சர்வதேச கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது கிளைகளை திறக்க புதிய கல்விக் கொள்கை உதவும். சாதாரண ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களும் அவற்றில் சேர முடியும். புதிய கல்விக் கொள்கை நமது இளைஞர்களின் எதிர்கால தேவைக்கான அறிவையும், திறமைகளையும் வளர்த்துக்கொள்ள உதவும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

* மேற்கு வங்கத்தில் ஏற்க மாட்டோம்
மாநாட்டில் பங்கேற்ற மேற்கு வங்க மாநில கல்வி அமைச்சர் பார்தா சட்டர்ஜி கூறுகையில், ‘‘தேசிய கல்விக் கொள்கையானது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இது மாநிலங்களின் பங்களிப்பை குறைத்து விடக் கூடியது. இதைப் பற்றி இன்னும் நிறைய ஆலோசிக்க வேண்டி இருப்பதால் தற்போதைய நிலையில் புதிய தேசிய கல்விக் கொள்கையை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம்’’ என்றார்.

* புதிய கல்வி கொள்கைக்கு அமைச்சர் அன்பழகன் எதிர்ப்பு
தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் பின்பற்றப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக உயர் கல்விதுறை அமைச்சர் அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் கூறியுள்ளதாவது: 2035ம் ஆண்டிற்குள் மொத்த சேர்க்கை விகிதத்தை 50 சதவீதமாக உயர்த்துவதை இலக்காக கொண்டு புதிய கல்வி கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்தில் இந்திய அளவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தமிழகத்தின் உயர் கல்விதுறையில் மொத்த சேர்க்கை விகிதம் 49 சதவீதமாக உள்ளது. நடப்பு கல்வியாண்டில் 50% சேர்க்கை விகிதத்தை எட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. தரமான கல்விநிறுவனங்களை அனுமதித்தல், உயர்ரக ஆய்வக வசதிகள், நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய புது பாடங்களை அறிமுகப்படுத்துதல் என 2035ம் ஆண்டிற்குள் மொத்த சேர்க்கை விகிதம் 65% இலக்காக கொண்டு தமிழக அரசு செயல்பட்டுவருகிறது.

மேலும் இந்தியாவில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:26 என்று இருக்கும் நிலையில் தமிழகம் 1:17 என்ற அளவில் முன்னேறியுள்ளது. உயர்கல்வி படிப்பில் சேர்வதற்கான தேசிய நுழைவுத்தேர்வு என்பது மாணவர்களுக்கு படிப்பு சுமையை அதிகரிப்பதோடு கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை மறுக்கும். புதிய கல்வி கொள்கையில் வலியுறுத்தபட்டுள்ள அனைத்தையும், இருமொழி கொள்கையை பின்பற்றிய தமிழகம் மிகச் சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. வருங்காலத்திலும் இருமொழி கொள்கையையே தமிழக அரசு பின்பற்றும்.

* இது அரசின் கல்விக் கொள்கை அல்ல. நாட்டிற்கான கல்விக் கொள்கை
* சர்வதேச உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் கிளைகளை இந்தியாவில் அமைக்கும்.
* அரசின் குறுக்கீடு குறைவாகவே இருக்கும்.
- பிரதமர் மோடி.

* ‘முழுமையாக ஏற்க வேண்டும்’
புதிய தேசிய கல்விக் கொள்கையை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டிருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இதுபற்றி ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறுவதாக பாராட்டினார். அதோடு தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் புரிந்து கொண்டு முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags : President ,governors ,states ,Modi , New education policy, implementation, governor, president, prime minister consultation, states to cooperate, Modi insists
× RELATED இஸ்ரேலை தாக்க வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை