×

ஐஏஎஸ் அதிகாரிகள் தொல்லையால் அரசுப் பணியை விட்டு ஆட்டோ ஓட்டும் டாக்டர்: கர்நாடகாவில் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரிகள் தொல்லையால் வேலையை உதறிவிட்டு அரசு மருத்துவர் ஒருவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் உள்ள பிம்ஸ் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி நிபுணராக டாக்டர் ரவீந்திரநாத் பணியாற்றி வந்தார். கொரோனா பரவல் காரணமாக பல்லாரி பிம்ஸ் அரசு மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் தினமும் பணியாற்றும்படி அதிகாரிகள் வற்புறுத்தி உள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விடுப்பில் சென்றார். பின்னர் விடுப்பு முடிந்து பணிக்கு வந்த மறுநாள் அவருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டது. இதனால் மனம் உடைந்த டாக்டர் ரவீந்திரநாத், தனது வேலையை உதறினார்.

மேலும், சுகாதாரத் துறை, மருத்துவத் துறையில் உள்ள 4 ஐஏஎஸ் அதிகாரிகளின் நெருக்கடியால் தனது பணியில் இருந்து வெளியேறியதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், வேலையை விட்டு நின்ற டாக்டர் ரவீந்திரநாத், தனது சொந்த ஊரான பாட கிராமத்திற்கு குடும்பத்தினருடன் இடம்பெயர்ந்தார். அங்கு தற்போது ரவீந்திரநாத் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். தனது ஆட்டோவின் முன்பகுதியில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களின் அதிகார து‌‌ஷ்பிரயோகத்தால் தொல்லை கொடுத்ததாக எழுதியுள்ளார். இதையறிந்த கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் ராமுலு, ஆட்டோ ஓட்டி வரும் டாக்டர் ரவீந்திரநாத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, ‘உங்களது குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் என்னை நேரில் வந்து சந்தித்து உங்கள் பிரச்னைகளை தெரிவியுங்கள். மீண்டும் நீங்கள் பணிக்கு திரும்பும் படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று டாக்டர் ரவீந்திரநாத்திடம் வேண்டுகோள் வைத்துள்ளார். அதன்படி விரைவில் டாக்டர் ரவீந்திரநாத், அமைச்சர் ராமுலுவை சந்தித்து தனக்கு தொல்லை கொடுத்த ஐஏஎஸ். அதிகாரிகள் பற்றி புகார் கொடுக்க உள்ளார்.

Tags : Auto driver ,Karnataka ,IAS , IAS Officers, Harassment, Government Service, Auto, Doctor, Karnataka
× RELATED நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்