×

கொரோனா பரிசோதனையிலும் தளர்வுகள் பாதிப்பை குறைத்து காட்ட டெஸ்ட் கிட்டுகள் உடைப்பு: அரசு டாக்டர்கள் குமுறல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரு மாதமாக கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. ஊரடங்கில் அரசு சில தளர்வுகளை அளித்துள்ளதை போல, கொரோனா பரிசோதனையிலும் நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்துள்ள சில தளர்வுகள், கொரோனாவின் தாக்கத்தை அதிகப்படுத்தி வருவதாக மருத்துவர்கள் குமுறுகிறார்கள். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதத்தில் தினமும் சராசரியாக 20, 25 பேர் என்ற எண்ணிக்கையில் இருந்த கொரோனா தாக்கம் ஜூலை, ஆகஸ்ட்டில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.   

இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்ககூடாது என்பதற்காக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் மூவரும், இஸ்டத்துக்கு விதிமுறைகளை வகுத்து அதை செயல்படுத்தி வருவதாக பகீர் குற்றசாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் 150 பேருக்கு கொரோனா டெஸ்ட் எடுத்து வந்த  நிலையில் தற்போது 50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டில் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்தால், அவரின் குடும்பத்தினர் மற்றும் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கவேண்டும். ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் தற்போது கொரோனா பாசிட்டிவ் வந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 நாட்களுக்கு பிறகு பரிசோதனை செய்தால் போதும் என வாய்மொழியாக ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனால் டாக்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் கொரோனா பாசிட்டிவை உறுதிபடுத்தும் சோதனையான (ஸ்வாப் சோதனை) பிசிஆர் டெஸ்ட் கிட்டை பயன்படுத்துவதிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் குழப்பமான உத்தரவை டாக்டர்கள் மற்றும் லேப்டெக்னீசியன்களுக்கு பிறப்பித்துள்ளனர். அதன்படி, ஒருவருக்கு தொண்டை மற்றும் மூக்கில் (நாசி துவாரம்) டெஸ்ட்கிட் மூலம் சளிமாதிரி எடுக்கப்படுகிறது. இந்த இரண்டின் மூலம் தான் கொரோனா பாசிட்டிவ் என்பதை உறுதி செய்யமுடியும். இதை மாற்றி, மூக்கில் மட்டும் எடுத்தால் போதும், என சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் தொண்டையில் உள்ள சளி மாதிரியை எடுக்க பயன்படுத்தப்படும் கிட்டை டாக்டர்கள் உடைத்து போட்டு விடுகிறார்கள்.

மேலும், மூக்கில் மட்டும் எடுப்பதால் பெரும்பலான நபர்களுக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வருகிறது. ஆனால் சில நாட்களில் அவர்கள் கடுமையான காய்ச்சலால்  பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. வசதி குறைந்தவர்கள், மீண்டும் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும்போது, பாசிட்டிவ்  என ரிசல்ட் வந்துவிடுகிறது. மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு  100 பேருக்கு 14 பேர் என்ற அளவில் உள்ளதால் இதை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் டாக்டர்களை கட்டாயப்படுத்தி வருகிறார்கள். இதற்காக டெஸ்டில் தளர்வுகள் அளிப்பது, வீடுகளில் ஓய்வில் இருக்கும் வயதான நபர்களுக்கு டெஸ்ட் எடுத்து நெகட்டிவ் ரிசல்ட் காட்டுவது, மேலும் பரிசோதனை செய்யும் நபர்களின் எண்ணிக்கையை குறைப்பது போன்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

 சமூகஆர்வலர்கள் பலர் கொரோனா பரிசோதனை குறைபாடுகளை சமூக வலை தளங்களில், சுட்டி காட்டி வருகிறார்கள். இந்நிலையில், கலெக்டர் மெகராஜ், கொரோனா தொடர்பான புகார்களை சுகாதார நலப்பணிகள்  இணை இயக்குனர், துணை இயக்குனர், அரசு மருத்துவகல்லூரி டீன் ஆகியோரின் கவனத்து கொண்டு செல்லும்படி பதிவிட்டுள்ளார். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்களுக்கு அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. காய்ச்சல், சளி, இருமல் அதிகம் இருப்பவர்கள் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றனர்.

Tags : doctors ,Breakdown ,Government , Corona, Test Kits Breaking, Government Doctors
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...