×

6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்படும் நீலகிரி சுற்றுலா தலங்கள்..!! சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரி: நீலகிரியில் 9-ம் தேதி முதல் உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னுர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்காக்கள் உள்ளிட்டவை திறக்கப்படுகின்றன. மேலும், சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம், உள்ளூர் மக்கள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை, ஆதார் அவசியம் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தற்போது கொரோனா அச்சுறுத்தலால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. சுற்றுலா நடவடிக்கைள் முழுவதுமாக முடக்கப்பட்டன.

இதனால், சுற்றுலாவை நம்பியிருந்த கடை வியாபாரிகள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மிகவும் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறைக்குத் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என அத்துறையை சார்ந்தவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில், புதன்கிழமை முதல் சுற்றுலாப்பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்கு வரலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா இன்று கூறியதாவது; சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்கு வந்து செல்ல இ-பாஸ் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இதற்காக இ-பாஸ் விண்ணப்பத்தில் சுற்றுலாப் பயணிகள் என்று விண்ணப்பிக்கலாம். சுற்றுலாப் பயணிகளுக்காக மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைத்துறையின் கீழ் உள்ள பூங்காக்கள் மட்டும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி முதல் திறக்கப்படும். அவற்றில் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் இ-பாஸ் பெற்று லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்கலாம். ஆனால், தினமும் குறிப்பிட்ட அளவிலேயே சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கப்படும். மாவட்டத்துக்குள் வருபவர்கள் அனைருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றார். நீலகிரி மாவட்டத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலா தலங்கள் திறக்கப்படுவதால், சுற்றுலாவை நம்பியுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கள் வாழ்வாதாரத்துக்கு வழி பிறந்துள்ளதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Tags : tourist sites ,Nilgiri , Nilgiris, Tourist Places, e-Pass, District Collector
× RELATED நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜ...